நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு: ஆனைமலை விவசாயிகள் மகிழ்ச்சி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு: ஆனைமலை விவசாயிகள் மகிழ்ச்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஆக
2019
23:13

ஆனைமலை:ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, முதல் போக நெல் சாகுபடி செய்வதற்காக, நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.ஆனைமலை தாலுகாவில், முதல் போக நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வலியுறுத்தி, கடந்த மே மாதம் முதல் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


இந்நிலையில், தமிழக முதல்வர் உத்தரவின்படி, ஆழியாறு அணையில் இருந்து, முதல் போக நெல் சாகுபடிக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.நேற்று முதல், டிச., 31ம் தேதி வரை, 135 நாட்களுக்கு, 1,059 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால், 6,400 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது.நேற்றைய நிலவரப்படி ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், 92.30 அடிக்கு நீர் மட்டம் இருந்தது. பழைய ஆயக்கட்டுக்கு வினாடிக்கு, 120 கனஅடி வீதம் தண்ணீர் வழங்கப்படுகிறது.துணை சபாநாயகர் ஜெயராமன், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார். வால்பாறை எம்.எல்.ஏ., கஸ்துாரி,பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார், தாசில்தார் வெங்கடாசலம், கண்காணிப்புபொறியாளர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் லீலா, உதவிப்பொறியாளர் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் நெல் சாகுபடி பரப்பு குறைவது தவிர்க்கப்படும்.முதல்போகத்துக்கு, மே மாதம் வழங்க வேண்டிய தண்ணீர் தற்போது தான் திறக்கப்படுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க இரண்டாம் போக நெல் சாகுபடிக்கும் உரிய பருவத்தில் தண்ணீர் திறக்க வேண்டும்,' என்றனர்.


துணை சபாநாயகர் ஜெயராமன் பேசியதாவது:விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றவும், புதிதாக மூன்று தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக, தமிழக முதல்வர் அடுத்த மாதம் கேரள முதல்வரை சந்தித்து பேச உள்ளார்.இத்திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும். இதன் மூலம், 4.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். தற்போது, பால் உற்பத்தி விலை அதிகரித்து உள்ளதால், கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பயனடைவார்கள்.இவ்வாறு, தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X