ஆர்.கே.பேட்டை: தொடர்ந்து மழை பெய்து வருவதால், விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் விநாயகர் சிலை தயாரிப்பில், தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆறு மாதமாக, சிலைகளை தயாரித்து வந்தவர்கள், தற்போது, அவற்றுக்கு வண்ணம் தீட்டி விற்பனைக்காக, சாலையோரம் காட்சிக்கு வைத்துள்ளனர். அவற்றின் தோற்றத்தை கண்டு வியக்கும் பக்தர்கள், வாங்கி செல்ல முன்பதிவு செய்கின்றனர்.இந்நிலையில், இரண்டு வாரங்களாக, ஆர்.கே. பேட்டை பகுதியில், தொடர் மழை பெய்து வருவதால், விநாயகர் சிலைகளை, விற்பனைக்காக, பொதுமக்கள் பார்வைக்கு வைக்க முடியாமல், தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால், தயாரித்த சிலைகளை வரும் விநாயகர் சதுர்த்திக்குள் விற்பனை செய்ய முடியுமா என்ற ஏக்கத்தில் காத்திருக்கின்றனர்.மேலும், சிலர், உள் அரங்குகளில் சிலைகளை காட்சிக்காக வைத்து, விற்பனையை நடத்தி வருகின்றனர். இதனால், சிலைகளின் விலை அதிகரிக்கக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.