ஆர்.கே.பேட்டை: மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், கழிவுநீர் கால்வாய்கள் துார் வாரி சீரமைக்காததாலும், குப்பை தொட்டிகளை அவற்றுக்குரிய இடத்தில் வைத்து, குப்பையை அகற்ற முன்வராததாலும், கொசுக்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது.திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், ஊராட்சிகளுக்கு வழகங்கப்பட்ட குப்பை தொட்டிகள், கிராமங்களில் ஆங்காங்கே வைக்கப்படாமல், ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்திலேயே ஒட்டுமொத்தமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதனால், அவை பொதுமக்களுக்கு பயன்படாமலே துரு பிடித்து வீணாகி வருகின்றன. ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஜனகராஜகுப்பம், சந்திரவிலாசபுரம், எஸ்.வி.ஜி.புரம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில், குப்பை தொட்டிகள் வீணாக கிடக்கின்றன.இதேபோல், கழிவுநீர் கால்வாய்களும், துார்வாரப்படாமல் உள்ளன. இதனால், கொசுக்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், கால்வாய்களில் தேங்கி நிற்கும் கழிவுநீரால், சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலையும் உருவாகி வருகிறது.ஒன்றிய நிர்வாகம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை, இந்த மழைக்காலத்தில் மேலும் சுறுசுறுப்பாக செயல்படுத்தவும், கழிவுநீர் அகற்றம் மற்றும் குடிநீர் வினியோகத்தை சுகாதார ஆய்வாளர்களும் கண்காணிக்கவும் வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.