| 'எப்போது விடியல்!'பாதுகாப்பற்ற குடிசைகளில் வாழ்க்கை Dinamalar
'எப்போது விடியல்!'பாதுகாப்பற்ற குடிசைகளில் வாழ்க்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
22:48

பந்தலுார்:பந்தலுார் அருகே, பாட்டவயல் சந்தனச்சிறா பழங்குடியின கிராம மக்களுக்கு பட்டா கொடுத்தும், வனத்துறை தடையால் வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கூடலுார் வருவாய் கோட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமங்களில், பல கிராமங்களும் பழமை மாறாமல் நடைபாதை, சாலை, மின்சாரம், குடியிருப்பு, குடிநீர் என எந்த வசதிகளும் இல்லாமல் உள்ளன.


இந்த கிராமங்களில் அடிக்கடி ஆய்வு நடத்தும் அதிகாரிகள், பெயரளவுக்கு தகவல்களை பதிவு செய்கின்றனர்.இந்நிலையில், மாநில எல்லையான பாட்டவயல் பகுதியில் தாழ்வான இடத்தில் பனியர் இன பழங்குடி மக்கள், 11 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். ஐந்து வீடுகளில் வாழும் இவர்கள் பழமையான குடிசை வீடுகளில் உள்ளனர். முதுமலை, முத்தங்கா, கூடலுார் வனக்கோட்டத்திற்கு மத்தியில் பாதுகாப்பில்லாமல் உள்ளது. சமீபத்தில், மாவட்ட கலெக்டர் நேரடி ஆய்விற்கு பின்னர் இவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் தெருவிளக்கு, வீடு, குடிநீர் வசதிகள் ஏற்படுத்த வனத்துறை தடை விதித்துள்ளதால், விடிவு பெறாத கிராமமாக உள்ளது. 'திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமங்கள் உருவாக்க வேண்டும்,' என, அரசு கூறி வரும் நிலையில், இங்கு ஒரு கழிப்பிடம் கூட இல்லை. இரவில் இதற்கும் வழியில்லை. முதல் கட்டமாக கிராமத்திற்கு சாலை அமைக்கவும், பின்னர் பிற வசதிகள் ஏற்படுத்திடவும் மாவட்ட நிர்வாகம் முன்வந்தால் மட்டுமே, சந்தனச்சிறா பழங்குடியின கிராமத்திற்கு மறுவாழ்வு கிடைக்க வாய்ப்புள்ளது.


பழங்குடியின சங்க நிர்வாகி நீலகண்டன் கூறுகையில்,'' பழங்குடியின மக்களின் மறுவாழ்வுக்காக, மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் பலகோடி ரூபாய் ஒதுக்கி வருகின்றன. ஆனால், எங்களுக்கான திட்டங்கள் முழுமையாக கிராமங்களை சென்று அடைவதில்லை என்பதற்கு இந்த கிராமம் சிறந்த உதாரணம். இதே போன்று கூடலுார் பகுதியில் பல கிராமங்கள் உள்ளன.


இவற்றை, மாவட்ட நிர்வாகம் உட்பட மாநில மக்கள் பிரதிநிதிகள் நேரடியாக வந்து பார்வையிட்டால் மட்டுமே, மழை காலம் உட்பட பிற நாட்களில் மக்கள் படும் அவதி பற்றிய உண்மை விளங்கும். எனவே, இத்தகைய கிராமங்களை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். பாட்டவயல் சந்தனச்சிறா பழங்குடியின கிராமத்து குடியிருப்புகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X