| வன வளம் மேம்பாடு; யானைகள் தின விழாவில் பெருமிதம் Dinamalar
வன வளம் மேம்பாடு; யானைகள் தின விழாவில் பெருமிதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
22:59

ஊட்டி:'தமிழகத்தில் சுருங்கி இருந்த வனங்களின் பரப்பளவு கடந்த, 30 ஆண்டுகளில் பெருகி உள்ளது,' உலக யானைகள் தின விழாவில் தெரிவிக்கப்பட்டது.ஊட்டி அரசு கலை கல்லுாரியில் உலக யானைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விலங்கியல் துறை பேராசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.


கல்லுாரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்து பேசுகையில்,''யானைகளின் தந்தங்கள் வேட்டையாடப்படுவது குறைந்துள்ளதால், தற்போது யானைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நீலகிரியில், முதுமலை மற்றும் கூடலுார் பகுதிகளில் யானைகள் அதிகளவில் வாழ்கின்றன. யானைகள் வாழ்ந்தால், உயிர் சூழல் மேம்படும். இதனால், யானைகள் வழித்தடங்களில் கட்டடங்கள் கட்டுவது தவிர்க்கப்பட வேண்டும். யானைகளின் பாதுகாப்பை மக்களாகிய நாம் உறுதி செய்வது அவசியம். நாட்டிலேயே, ஊட்டி அரசு கலை கல்லுாரியில் விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை செயல்பட்டு வரும் நிலையில், துறை பேராசிரியர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இங்கு பயிலும் மாணவர்கள் இத்துறையில் சிறந்து விளங்க முடியும்,'' என்றார்.முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:கடந்த காலங்களில் விவசாயத்திற்காகவும், வேறு காரணங்களுக்காகவும் வன வளங்கள் அழிக்கப்பட்டும், வன விலங்குகளும் வேட்டையாடப்பட்டு வந்தன. மத்திய அரசால், 1980ல் வன சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, வன விலங்குகளும் வனங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வனப்பகுதியில் சுரங்கம் தோண்டுவது உள்ளிட்ட தேவைகளுக்காக அனுமதி வழங்கப்படாமல் இருந்ததால், 30 ஆண்டுகளில் தமிழகத்தில் வனவளம் மேம்பட்டுள்ளது. வனம் மற்றும் வன உயிரினங்களின் பாதுகாப்பில் நீதிமன்றங்களின் பங்கு அதிகமாக உள்ளது.


நீலகிரி மாவட்டத்தில், முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில், யானை, புலி, கரடி மற்றும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் வாழ்கின்றன. ஆனால், இங்கு, ஆக்கிரமித்துள்ள யூபட்டோரியம், லேண்டானா மற்றும் பார்த்தீனியம் போன்ற அன்னிய நாட்டு செடிகளால், விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவ்வகை செடிகளை அகற்றுவது சவாலாகவே உள்ளது.


யானைகளின் வழித்தடங்களை மறித்து கட்டடங்கள் கட்டுவதும், ஆக்கிரமிப்புகளாலும் யானைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்த்தாலே, யானைகள் சுதந்திரமாக வாழ வழிவகை ஏற்படும். எனவே வன வளங்களை யும் வன உயிரினங்களையும் பாதுகாப்பது நமது கடமையாகும். இவ்வாறு கவுசல் பேசினார்.தொடர்ந்து, யானைகளின் வாழ்வியல் மற்றும் வனப்பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவியருக்கு வினாடி--வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. துறை தலைவர் எபினேசர் முன்னிலை வகித்தார். கல்லுாரி பேராசிரியர்கள் மாணவ மாணவியர் பலர் பங்கேற்றனர். பேராசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X