| மரங்கள் வெட்டி சாய்ப்பு சூழல்: ஆர்வலர்கள் வேதனை Dinamalar
மரங்கள் வெட்டி சாய்ப்பு சூழல்: ஆர்வலர்கள் வேதனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
23:31

பொள்ளாச்சி:கிராமங்களில், அரசு விடுமுறை நாளில், வேப்ப மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது பற்றி, விசாரணை நடக்கிறது.பொள்ளாச்சி அடுத்துள்ள, அரசம்பாளையம் - காரச்சேரி ரோட்டில், நீர் நிலைகளுக்கு நடுவே தார் ரோடு அமைந்துள்ளது. ரோட்டின் கரைகளை பலப்படுத்தும் நோக்கில், வேப்பமர நாற்றுகள் நடவு செய்யப்பட்டு, பாதுகாக்கப்பட்டன.


நேற்று காலை, ரோட்டின் இரு கரைகளிலும் மண்டியிருந்த புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. விடுமுறை நாளாக இருந்தும், பொக்லைன் வரவழைக்கப்பட்டு, ஊராட்சி பணியாளர் மேற்பார்வையில், கரையின் பாதுகாப்புக்காக வளர்க்கப்பட்ட ஐந்து வேப்பமரங்கள் அடியோடு வெட்டி அகற்றப்பட்டன.இதுபற்றி கிணத்துக்கடவு தாசில்தாருக்கு, படத்துடன் புகார் அனுப்பப்பட்டதால், வெட்டப்பட இருந்த சில வேப்ப மரங்கள் தப்பின.இதேபோல, பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், குள்ளிச்செட்டிபாளையம் பிரிவில், பி.ஏ.பி., கிளைக்கால்வாய் துார்வாரும் பணியில், ஐந்து வேப்பமரங்கள் வெட்டப்பட்டன.


மரத்தின் வேர்கள் கிளைக்கால்வாயில் சேதத்தை ஏற்படுத்துவதால், மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி பொள்ளாச்சி தாசில்தாருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளதாக, சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.விடுமுறை நாளில், முறையான அனுமதியின்றி மரம் வெட்ட துணை சென்ற ஊராட்சி நிர்வாகத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சூழல் ஆர்வலர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X