தொண்டாமுத்துார்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், தக்காளி வரத்து அதிகரித்ததால், ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் விலை சரிந்தது.தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 25,555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன், கனமழை பெய்த காரணத்தால், சந்தைக்கு வரும் தக்காளியின் அளவு குறைந்தது. இதன் எதிரொலியாக, கடந்த வாரம், ஒரு கிலோ தக்காளி, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொண்டாமுத்தூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில், 15 கிலோ தக்காளி, 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரமாக, சாரல் மழையாக பெய்து வருகிறது. இதனால், பயிர்களும் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளன.பெரும் மழைக்கு முன், அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். தற்போது, சந்தைகளுக்கு தக்காளி வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், மழையின் காரணமாக உயர்ந்த தக்காளி விலை, மீண்டும் சரிந்துள்ளது.நேற்று உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி, 13 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தொண்டாமுத்தூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில், 15 கிலோ தக்காளி, 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விலை உயர்ந்து ஒரு வாரம் கூட நிலையாக நிற்காமல், சரிவடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.