| பிச்சை எடுப்பது சர்வதேச அளவில் மிகப்பெரிய தொழிலாக உள்ளது Dinamalar
பிச்சை எடுப்பது சர்வதேச அளவில் மிகப்பெரிய தொழிலாக உள்ளது
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
00:28

ராமநாதபுரம் : பிச்சை எடுப்பது சர்வதேச அளவில் மிகப்பெரிய தொழிலாக உள்ளதாக, மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் வேதனை தெரிவித்தார்.


மனித கடத்தல், கொத்தடிமை, பாலியல் அடிமைகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், என அனைத்தையும் தடுத்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்டம்தோறும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நீதிபதி தலைமையில், கலெக்டரின் நேர்முக உதவியாளர், தொழிலாளர் நல உதவி கமிஷனர், வக்கீல்கள், சட்ட தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த குழுவின் உறுப்பினர்கள் ஆவார்கள். இந்த குழு துவக்க விழா நேற்று ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் தலைமை வகித்து பேசியதாவது:மனித கடத்தல், பாலியல் தொல்லை, அடிமை தொழிலாளர்களை தடுப்பது, மீட்பது, மறுவாழ்வு வழங்குவது, இதற்கான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது மிக முக்கியம். உலகில் மிகப்பெரும் தொழிலாக பிச்சை எடுப்பது உள்ளது. இங்கு பிச்சை எடுப்பவர்களை இயக்குபவர்கள் மும்பையிலோ, கொல்கத்தாவிலே இருந்து இயக்கி பெரும் பணக்காரர்களாக உள்ளனர், என்றார்.கலெக்டர் வீரராகவராவ் பேசுகையில், ஜனநாயக நாட்டில் அனைவரும் அவர்களதுவிருப்பப்படி தனித்து இயங்குவதற்கான உரிமை உள்ளது. அதில் பாதிப்பு ஏற்படும் போது, அதை சமுதாயத்தில் விழுந்த கரும்புள்ளியாக கருத வேண்டும். குழந்தைகளை பாதுகாப்பது, மீட்பது, மறுவாழ்வு அளிப்பது ஆகிய அனைத்து துறைகளும் இதில் உள்ளது, என்றார். நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ராமகிருஷ்ணன், ஓம்பிரகாஷ்மீனா எஸ்.பி., தொழிலாளர் நலத்துறை துணை கமிஷனர் சங்கர், இந்தியநீதி இயக்கம் சார்பில் மெர்லின் பிரிடா, சமூக பங்களிப்பு மேலாளர் சாம் ஜெபத்துரை பேசினர். தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ஏ.சுபத்ரா நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X