| குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் Dinamalar
குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
01:29

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த கொட்டாரம் கிராமத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திட்டக்குடி அடுத்த போத்திரமங்கலம் ஊராட்சியில் கொட்டாரம் துணை கிராமமாக உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த நான்கு மாதங்களாக போதிய குடிநீர் இன்றி இப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்தனர். கடந்த மாதம் புதிய போர் போடப்பட்டு, மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இரண்டு வாரங்களாக வினியோகம் செய்யப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து பழுப்பு நிறத்தில் வந்தது. உவர்ப்பு நீராக இருக்கும் என மக்கள் நினைத்து பயன்படுத்தினர். இதனால் இப்பகுதியில் சிலருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. குழந்தைகளுக்கு உடலில் புதிதாக கட்டிகள் தோன்றியதால் அச்சமடைந்த மக்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டறிந்த மக்கள், உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் நேற்று காலை 10மணிக்கு மேல்நிலை குடிநீர்தேக்க தொட்டி முன்பு கழிவுநீர் பிடித்த குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உரிய தீர்வு காணும் வரை கலைந்து செல்வதில்லை என அமர்ந்திருந்தனர். தகவலறிந்த மங்களூர் ஒன்றிய பி.டி.ஒ.,க்கள் சங்கர் மற்றும் விஜயா நேரில் சென்று ஆய்வு செய்தனர். குடிநீர் வினியோகம் செய்யும் பைப்லைன் அருகே கழிவுநீர் கலக்கும் இடத்தை ஆய்வு செய்து பைப்லைன்களை சரிசெய்ய உத்தரவிட்டார். மேலும் குடிநீரில் கழிவுநீர் கலப்பதற்கு காரணமான வீட்டு உரிமையாளர்களை எச்சரித்தார். தொடர்ந்து குடிநீர்பைப்லைன்களை சரிசெய்யும் பணி நடந்தது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு 12மணிக்கு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X