| மாவட்டத்தில் நிலத்தை தயார் செய்யும் பணி தீவிரம்! விவசாயிகளுக்கு வரப்பிரசாதமான 2 நாள் மழை Dinamalar
மாவட்டத்தில் நிலத்தை தயார் செய்யும் பணி தீவிரம்! விவசாயிகளுக்கு வரப்பிரசாதமான 2 நாள் மழை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
01:43

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 நாட்கள் கனமழை பெய்ததால் காய்ந்து கிடந்த நிலத்தை உழுது நடவுக்கு தயார் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


'ஆடிப்பட்டம் தேடி விதை' என்பார்கள். ஆடிப்பட்டத்தில் விதைப்பு செய்தால் பயிர்கள் நோய் தாக்காமல் செழித்து வளரும். அத்துடன் மழை காலம் துவங்குவதற்குள் அறுவடைக்கு தயாராகி விடும். இந்த ஆண்டு ஆடி மாதம் முழுவதும் கடும் வெயில் வறுத்தி எடுத்தது. மாதம் முழுவதும் பெரும்பாலான நாட்களில் 100 டிகிரிக்கு மேல் தான் வெப்பம் பதிவானது.


கோடை உழவு கூட செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். அதனால் காய்கறி, பயறு, நேரடி நெல் விதைப்பு போன்ற பணிகள் யாவும் முடங்கிப்போயின.தொடர் வரட்சியினால் குடிநீருக்கும் பிரச்னை ஏற்பட்டது. தென்மேற்கு பருவ மழை சரி வர கைகொடுக்கவில்லை. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு நல்ல மழை கிடைத்தது. ஆடி மாதம் முழுவதும் மழையில்லாமல் வறட்சியிலேயே கடந்தது. மானாவாரி விதைப்புஇந்நிலையில் கடும் வறட்சியில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், ஆரணி, திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் கன மழை பெய்தது.


கடந்த 17 ம் தேதி 130 மி.மீ., மழையும், 18 ம் தேதி 55 மி.மீ., மழையும் கிடைத்தது. இதனால்பெரும்பாலான இடங்களில் குடிநீர் பிரச்னை ஓரளவு தீர்ந்தது. இந்த தொடர் மழை கடலுார் மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாகும். இம்முறை விவசாயத்தில் சிறந்த விளைச்சலை எடுக்க முடியும் என விவசாயிகளுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. இதன் காரணமாக உடனடியாக நிலத்தை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஏர் உழுதல், வரப்பு கட்டுதல், மண் அணைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


புஞ்சை நிலப்பகுதியில் பயறு, காய்கறி, எள், உளுந்து, வரகு, மக்காச்சோளம், பருத்தி போன்றவை நேரடி விதைப்பு செய்து வருகின்றனர்.அதேப்போல ஏற்கனவே நிலத்தை தயார் செய்திருந்த நஞ்சை நிலத்தில் நேரடி நெல் விதைப்பும் பல இடங்களில் செய்து வருகின்றனர். காவிரி தண்ணீர் கடைமடைக்கு வர இன்னும் சில நாட்கள் ஆகும். இந்நிலையில் இந்த மழையை பயன்படுத்தி காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் விருத்தாசலம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் நஞ்சை நிலப்பகுதியில் எதிர்வரும் சம்பா போகத்திற்கு நெல்நடவு செய்வதற்காக நிலத்தை தயார் செய்யும் பணியிலும் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


கடலுார் மாவட்டத்தில் 2500 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் நடவு செய்யப்படுகிறது. அதையொட்டி விதை, உரம் போன்றவை வழங்கவும் அரசு தீவிரமாக ஏற்பாடு செய்து வருகிறது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X