கோவை:கோவை மாநகராட்சியில் குப்பை பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண பகீரத முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு வேலைக்கும், ஒவ்வொரு அதிகாரிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.வெள்ளலுார் குப்பை கிடங்கு தொடர்பாக, பசுமை தீர்ப்பாயம் 'கிடுக்கிப்பிடி' உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, தரம் பிரித்து சேகரிக்கவும், குப்பையில் இருந்து உரம் மற்றும் மின்சாரம் தயாரிக்கவும், மாநகராட்சி முயற்சித்து வருகிறது.
மாநகர எல்லைக்குள், 69 இடங்களில் மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கவும், 271 பூங்காக்களில் பூங்கா கழிவுகளில் இருந்து, உரம் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டது. மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கும் மையம், 12 இடங்களில் தயாராகி உள்ளது.கவுண்டம்பாளையம் பழைய குப்பை கிடங்கு வளாகத்தில், பரீட்சார்த்த முறையில் செயல்படுகிறது. 50 இடங்களில் பூங்கா கழிவுகளை உரமாக்கும் மையம் கட்டப்பட்டுள்ளது.இப்பணிகளை விரைவுபடுத்துவதற்காக, ஒவ்வொரு அதிகாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பூங்கா கழிவுகளை உரமாக்கும் மையம் செயல்படுவதை, சுகாதார அலுவலர் பிச்சுமணி கண்காணிக்க வேண்டும்.கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில், மக்கும் குப்பையை உரமாக்கும் மையம் செயல்படுவதை மண்டல சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், மத்திய மண்டலம் மற்றும் மேற்கு மண்டலங்களில் குணசேகரன், தெற்கு மண்டலத்தில் சுகாதார ஆய்வாளர் ஜெரால்டு ஆகியார் கண்காணிக்க வேண்டும்.அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்கள், லாட்ஜ்களில், 100 கிலோவுக்கு அதிகமான குப்பை உருவாக்கினால், அவர்களே மேலாண்மை செய்து கொள்ள வேண்டும். மாநகராட்சி எல்லைக்குள், அதிக குப்பை உருவாக்குவோராக எவ்வளவு பேர் இருக்கின்றனர் என, சுகாதார ஆய்வாளர்கள் மூலம் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு, சுகாதார ஆய்வாளர் சந்திரனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கட்டட கழிவு மறுசுழற்சி மையம் கட்டுமான பணி மற்றும் செயல்பாட்டை கண்காணிக்கும் பொறுப்பு, உதவி நகரமைப்பு அலுவலர் செந்தில் பாஸ்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாநகர எல்லைக்குள், 69 இடங்களில் மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கவும், 271 பூங்காக்களில் பூங்கா கழிவுகளில் இருந்து, உரம் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டது. மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கும் மையம், 12 இடங்களில் தயாராகி உள்ளது.
டிசம்பருக்குள் தீர்வு
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'டிச., இறுதிக்குள் குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். ஒவ்வொரு பணிக்கும் தனி அதிகாரிக்கு, பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த வேலை சரியாக நடக்கும் பட்சத்தில், காஸ் தயாரிப்பதற்கு காய்கறி கழிவுகளும், மறுசுழற்சிக்கு பயன்படும் குப்பையை, தரம் பிரிப்பதற்காக மட்டும் வெள்ளலுார் கொண்டு செல்லப்படும். மக்கும் குப்பை, சேகரமாகும் இடத்திலேயே உரமாகி விடும்' என்றனர்.