மதுரை : மதுரையில் உணவுப் பாதுகாப்பு துறையினர் சேகரித்த 63 மாதிரி எண்ணெயில் 61ல் கலப்படம் இருப்பது தெரிய வந்தது. கலப்படத்தை தடுக்க விழிப்புணர்வு குறும்படம் தயாராகிறது.
கீழ மாசி வீதி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சோமசுந்தரம் தலைமையில் அதிகாரிகள் நல்லெண்ணெய், கடலெண்ணெயை சோதனையிட்டனர். 23 கடைகளில் விற்கப்பட்ட 63 வகை எண்ணெய் மாதிரிகளை சேகரித்தனர். ஆய்வுக்காக சென்னை உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அவற்றை அனுப்பினர். அதன் முடிவு வெளியாகியுள்ளது. இதில் 63 மாதிரிகளில் 61ல் கலப்படம் இருப்பது தெரிய வந்துள்ளது. 23 கடைகளில் ஒரு கடையில் மட்டுமே தரமான எண்ணெய் விற்கப்படுவதும் தெரிந்தது.
கலப்படத்தை தடுக்க உணவுப் பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்கிறது. கலப்பட எண்ணெய் தயாரிப்போரை திருத்துவதை விட, வாங்குவோரை விழிப்படைய செய்ய குறும்படம் ஒன்றையும் தயாரிக்கிறது. அதில் கலப்பட எண்ணெயை கண்டு பிடிக்கும் வழிமுறைகள் சுட்டிக்காட்டப்படும். உணவுப் பாதுகாப்பு அலுவலர் கூறுகையில், ''குறைந்த விலை என்பதற்காக உடல்நலத்தை கெடுக்கும் எண்ணெய் வகைகளை வாங்கக் கூடாது. தரமானதாக கவனித்து வாங்க வேண்டும்,'' என்றார்.