தேனி : மயிலாடும்பாறை வட்டார கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநில அளவிலான போராட்டம் தேனியில் நடத்தப்படும் என ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் மயில் தெரிவித்தார். க.மயிலாடும்பாறை வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, ஆசிரியர் விரோத போக்கில் ஈடுபடுவதாக கூறி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஆர்ப்பாட்டம், ஜூலை 27 முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் பணிக்கு செல்லும் போராட்டம் நடத்தினர். பிரச்னை தீர்வு கிடைக்காததால் நேற்று தேனி முதன்மை கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ராஜராம்பாண்டியன் தலைமையில் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகநாதன், பொதுக்குழு உறுப்பினர் முருகானந்தம், ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி, மாநில செயலாளர் முருகன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க முத்தரசப்பன், ஜாக்டோ-ஜியோ நிர்வாகி அன்பழகன், எஸ்.டி.எப். ஐ. பொதுக்குழு உறுப்பினர் மோசஸ் பேசினர்.தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் மயில் கூறுகையில், '' மயிலாடும்பாறை பி.இ.ஓ., சரஸ்வதி பணியாற்றிய 3 வட்டங்களிலும் ஆசிரியர்களிடம் சுமூக உறவு இல்லை. ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்களில் வேண்மென்றே தாமதம் செய்கிறார். உயர் அதிகாரிகளின் உத்தரவுகளையும் மதிப்பது இல்லை. பி.இ.ஓ. மீது பல புகார் அளித்தும் துறை ரீதியான நடவடிக்கை ஏதும் இல்லை. தொடர்ந்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாநில அளவிலான போராட்டம் தேனியில் நடத்தப்படும், என்றார். ராமர் நன்றி கூறினார்.