விருத்தாசலம்:தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வைகை அணை வனக்கல்லுாரி, ஆணை மலைப் பிரிவு பயிற்சி வனவர்களுக்கு, விருத்தாசலம் அரசு வனத்தோட்டக்கழக முந்திரி காப்பு காடுகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழக அரசு, சமீபத்தில் தேர்வு செய்த புதிய வனவர்கள், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வைகை அணை வனக்கல்லுாரியில் பயிற்சி பெற்று வருகின்றனர். அதில், ஆணைமலை பிரிவு பயிற்சி வனவர்கள், வனவர் பிரதீபா தலைமையில், 58 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களில் ௧௯ பேர் பெண்கள். தமிழகம் முழுவதும் உள்ள வனங்கள், வன உயிர்கள், பறவைகள் சரணாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.அந்த வகையில், விருத்தாசலம் வந்த பயிற்சி வனவர்களை, வன தோட்டக்கழக வனச்சரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் வரவேற்று, கோட்டேரி அரசு முந்திரி காப்புக் காட்டில் பயிற்சி அளித்தனர்.
அதில், முந்திரி கன்றுகளை நடவு செய்தல், உர மேலாண்மை, பூச்சி மேலாண்மை, அறுவடை, காடுகளை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. வனவர் செல்வமணி, வனக்கல்லுாரி பயிற்றுனர்கள் ஆதவன், ராஜ்குமார் உடனிருந்தனர்.முன்னதாக, நாகப்பட்டிணம் மாவட்டம், கோடியக்கரை வன உயிர்கள் சரணாலயம், பறவைகள் சரணாலயம், பிச்சாவரம் அலையாத்தி காடுகள், முத்துப்பேட்டை அலையாத்திக்காடுகள் ஆகிய இடங்களில் பயிற்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.