| வியூகம்! எதிர்க்கட்சிகளின் சவாலை முறியடிக்க ஆளுங்கட்சி... 2 எம்.எல்.ஏ.,க்களின் பதவியை பறிக்க அதிரடி திட்டம் Dinamalar
வியூகம்! எதிர்க்கட்சிகளின் சவாலை முறியடிக்க ஆளுங்கட்சி... 2 எம்.எல்.ஏ.,க்களின் பதவியை பறிக்க அதிரடி திட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
00:40

எதிர்க்கட்சிகளின் சவாலை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஆளுங்கட்சி தீவிரமாக இறங்கி உள்ளதால், புதுச்சேரி அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.கடந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., கட்சியை வீழ்த்தி, ஆட்சி அதிகாரத்தை காங்., கட்சி கைப்பற்றியது. பிரதான எதிர்க்கட்சியாக என்.ஆர்.காங்., கட்சி அமர்ந்தது.ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி அரசியல் நடவடிக்கைகள் எதிலும் ஆர்வம் காட்டாமல் இருந்தார். மக்கள் நலன் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் கருத்து கூறாமலும், ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டாமலும் அமைதி காத்து வந்தார்.இந்நிலையில், கடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., - பா.ஜ., கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட என்.ஆர்.காங்., படுதோல்வியை சந்தித்தது. இனிமேலும், அமைதியாக இருந்தால், கட்சி கலகலத்து விடும் என்பதால், ரங்கசாமி தனது மவுனத்தை கலைத்துள்ளார்.


சமீபத்தில், கூட்டணி கட்சிகளான அ.தி.மு.க., - பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, அவசர அவசரமாக, சட்ட சபை செயலரை சந்தித்து, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக நோட்டீஸ் அளித்தார். ரங்கசாமியுடன் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வந்தபோதும், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்தனர்.கடந்த 3 ஆண்டுகளாக அடக்கி வாசித்து வந்த எதிர்க்கட்சித் தலைவரின் திடீர் நடவடிக்கைகள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வரும் ஆளுங்கட்சி தரப்பு, ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடப்பதாக சந்தேகம் அடைந்துள்ளது.ஆட்சி கவிழ்ப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் முறியடிப்பதற்கு ஆளுங்கட்சி தரப்பு தீவிரமாக இறங்கி உள்ளது. முதல்கட்டமாக, காங்., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சமரச முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.


அடுத்தக்கட்டமாக, சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட பழைய புகார் ஒன்றை ஆளுங்கட்சி தரப்பு துாசி தட்டி எடுத்துள்ளனர்.காங்., எம்.எல்.ஏ.,க்களான தீப்பாய்ந்தான், விஜயவேணி ஆகியோர் தங்களை கட்சி மாறுமாறு பேரம் பேசுவதாக, என்.ஆர்.காங்., - அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் இருவர் மீது ஏற்கனவே சபாநாயகராக இருந்த வைத்திலிங்கத்திடம் புகார் அளித்து இருந்தனர். இந்த புகார் மீது விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என, வைத்திலிங்கம் அறிவித்து இருந்தார்.


தற்போது, ஆட்சி மாற்றம் முயற்சிக்கு பதிலடி தரும் வகையிலும், எதிர்க்கட்சிகளை நிலைகுலைய செய்யும் நோக்கத்திலும், புகாரில் சிக்கிய என்.ஆர்.காங்., - அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அதன் மூலமாக பதவி பறிப்புக்கான நடவடிக்கைகள் குறித்தும் சட்ட நிபுணர்களுடன் காங்., தரப்பு ஆலோசித்து வருகிறது.டில்லியில் முகாமிட்டுள்ள முதல்வர் மற்றும் அமைச்சர்கள், காங்., எம்.எல்.ஏ.,க்கள் இன்று புதுச்சேரி திரும்புகின்றனர். அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகள் வேகம் பெறும் என்பதால், புதுச்சேரி அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.- நமது நிருபர் -

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X