சேலம்: மூன்று ஆடுகளை திருடிய, இருவரை, போலீசார் கைது செய்தனர். மேலும், கறிக்கடையிலிருந்து, ஆடுகளை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
சேலம், சின்னதிருப்பதி, காந்தி நகரைச் சேர்ந்த, முருகன் மனைவி லட்சுமி, 37; இவரது தோழி சரோஜா, 38; இவர்களின், மூன்று ஆடுகளை, நேற்று முன்தினம் மதியம், அங்குள்ள கூட்டுறவு வங்கி பின்புறமுள்ள காலி நிலத்தில் கட்டிவிட்டு, வீட்டு வேலைகளை கவனித்து வந்தனர். மாலை, 5:00 மணிக்கு சென்று பார்த்தபோது, ஆடுகளை காணவில்லை. இதனால், அப்பகுதியில் தேடியபோது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள், ஆடுகளை, இருவர் தூக்கிச்சென்றதாக தெரிவித்தனர். அவர்கள் சென்ற வழியிலேயே, லட்சுமி சென்றுள்ளார். அப்போது, ஆடுகளை தூக்கிச்செல்வதை பார்த்து, அவர்களை பின்தொடர்ந்தார். சேலம், முகமது புறாவிலுள்ள கறிக்கடையில், அந்த நபர்கள், ஆடுகளை கட்டினர். இதுகுறித்து, லட்சுமி, கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்க, அவர்கள், கறிக்கடைக்கு வந்து, ஆடுகளை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைத்தனர். பின், ஆடுகளை திருடி, கறிக்கடையில் விற்க முயன்ற, முகமது புறாவைச் சேர்ந்த இம்ரான், 23, சின்னதிருப்பதி, மீனாட்சி நகரைச் சேர்ந்த, பிரகாஷ் மனைவி ஷாகீன், 34, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.