கூடலுார் : கூடலுாரை ஒட்டிய தமிழக - கேரள எல்லையில், சாலை சேதமடைந்து, வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், அரசுக்கு நாள்தோறும், 10 ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கூடலுார் பகுதியில் கடந்த, 8ம் தேதி பலத்த மழை பெய்தது. கூடலுார், கீழ்நாடுகாணி தமிழக - கேரள எல்லையை ஒட்டிய, கேரளப்பகுதியில், நிலச்சரிவு ஏற்பட்டு பல இடங்களில் சாலை சேதமடைந்தது வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால், நீலகிரி, கர்நாடகா, வட மாநிலங்கள் வாகனங்கள், இவ்வழியாக கேரளாவுக்கு செல்ல முடியாமல், வாகன உரிமையாளர்கள் அதனை சார்ந்த தொழிலாளர்கள் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நாடுகாணி வாகன நுழைவு வரி வசூல் மூலம், அரசுக்கு கிடைக்கும் வருவாயிலும், இழப்பு ஏற்பட்டுள்ளது.
வாகன போக்குவரத்து இல்லாததால் நாடுகாணி வாகன நுழைவு வரி வசூல் மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வருவாய்த்துறையினர் கூறுகையில், 'கேரளாவிலிருந்து வரும் வாகனங்களுக்கு, நுழைவு வரி வசூல் செய்வதன் மூலம், நாடுகாணி நுழைவு வரி வசூல் மையத்தில், நாள்தோறும் அரசுக்கு சராசரி, 10 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்தது. 'இச்சாலை சேதமடைந்து, வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது,' என, கூறினார்.