குன்னுார் : குன்னுாரில் 'பிளாஸ்டிக்' தடுப்புச்சுவர் அமைக்க விரைவில் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.
குன்னுார் நகராட்சியில் சேகரிக்கப்பட்ட, 3,000 டன் எடையுள்ள பிளாஸ்டிக் மூட்டைகள் ஓட்டுப்பட்டறை அருகே உள்ள குப்பை குழியில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், நாள்தோறும் மட்கும் மற்றும் மட்கா குப்பைகளில், பிளாஸ்டிக் பொருட்கள் தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சிக்கு பயன்படுத்த சிரமங்கள் இருந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து, 7 லட்சம் ரூபாய் மதிப்பில் 'பேலிங்' இயந்திரம், 'கிளீன் குன்னுார்' தன்னார்வ அமைப்பு மூலம், கொண்டு வரப்பட்டுள்ளது.
அமைப்பின் தலைவர் சமந்தா கூறுகையில், ''பிளாஸ்டிக் இல்லாத நீலகிரியை உருவாக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. மட்காத பிளாஸ்டிக் பொருட்களை இந்த இயந்திரத்தின் மூலம் வெப்பத்தால் அழுத்தம் கொடுப்பதால், 200 கிலோ வரை 'கம்ப்ரஸ்' செய்யப்படும்.''மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 'கம்ப்ரஸ்' செய்யப்பட்ட பிளாஸ்டிக் 'ஸ்லாப்' மூலம் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு, அந்த திட்டம் வெற்றி காணப்பட்டுள்ளது. இதேபோல, குன்னுாரில் தேவைப்படும் இடங்களில், சாலையோர தடுப்பு சுவரை அமைக்க முடியும்,'' என்றார்.
குன்னுார் நகராட்சி நகர்நல அலுவலர் கூறுகையில், ''கம்ப்ரஸ் பிளாஸ்டிக் மற்றும் கம்பி வலைகளை கொண்டு, கல் தடுப்பு சுவருக்கு, பிளாஸ்டிக் கான்கிரீட் அமைக்க விரைவில், சோதனை முயற்சி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.