விருத்தாசலம்: விருத்தாசலம் பீங்கான் தொழிற்பேட்டையில், புறநகர் பஸ் நிலையம் அமைப்பதற்கான இடத்தை சப் கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டார்.விருத்தாசலம் பஸ் நிலையத்திலிருந்து சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, சிதம்பரம், அரியலுார், கும்பகோணம், சேலம், கோயம்புத்துார், திருவனந்தபுரம், புதுச்சேரி, கடலுார், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும், சுற்றியுள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட நகரங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.மக்கள் தேவைக்கு ஏற்ப பஸ்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், பஸ் நிலையம் மற்றும் நகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. இதனால், புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், விருத்தாசலம் பீங்கான் தொழிற்பேட்டையில் பஸ் நிலையம் அமைப்பதற்கான இடத்தை சப் கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, தாசில்தார் கவியரசு, நகராட்சி பொறியாளர் பாண்டு உட்பட பலர் உடனிருந்தனர்.