கோவை : கோவை மாவட்டத்தில் செயல்படும் பொதுத்துறை வங்கிகளில், மாலை 4:00 மணி வரை, வாடிக்கையாளர் சேவை அளிக்கும் வசதி, விரைவில் துவங்கப்பட உள்ளது.
பொதுத்துறை வங்கிகளில், வாடிக்கையாளர் சேவை நேரம், காலை 10:00 முதல் பகல் 2:00 மணி வரை மட்டுமே உள்ளது. அதற்கு மேல் வங்கிக்கு செல்லும் வாடிக்கையாளர்கள், பணம் செலுத்தவோ, எடுக்கவோ முடியாது.தொழில் துறையினர், மதிப்பு மிகுந்த வாடிக்கையாளர்களுக்கு மட்டும், ஒரு சில வங்கிகளில் சலுகை கிடைக்கும். ஆனால், ஒரு சில தனியார் துறை வங்கிகள், கூடுதல் நேரம் சேவை அளிப்பதன் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கின்றன.இது பற்றி ஆராய்ந்த மத்திய அரசு, பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சேவை நேரத்தை அதிகரிக்க முடிவு செய்தது.
அதன்படி காலை 9:00 முதல் பகல் 3:00 மணி வரை, காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை, காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை என, மூன்று வெவ்வேறு சேவை நேரங்களை நிர்ணயித்தது.ஒரு பிராந்தியத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட மண்டலத்தில் செயல்படும் வங்கிகள், இந்த மூன்று வேலை நேரங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, கோவை மாவட்ட பொதுத்துறை வங்கிகளுக்கான வாடிக்கையாளர் சேவை நேரமாக, காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரையிலான நேரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.'விரைவில் இந்த சேவை தொடங்கும்' என்று, மாவட்ட கலெக்டர் ராஜாமணி அறிவித்துள்ளார்.