மடிப்பாக்கம்: மடிப்பாக்கம், கோவிந்தசாமி நகரைச் சேர்ந்த வெங்டேச சாஸ்திரிகள், 65, ராஜேந்திரன், 57, ஆகியோரின் வீடுகள் உட்பட, மூன்று வீடுகளில், 56 சவரன் நகைகள், கார் ஆகியவை, சமீபத்தில் திருடு போனது. மடிப்பாக்கம் போலீசார் விசாரணையில், சேலத்தைச் சேர்ந்த பிரம்மமூர்த்தி என்ற பிரபல கொள்ளையன் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, சேலத்தைச் சேர்ந்த வினோத், 28, என்பவருடன் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. 21 சவரன் நகைகள் மற்றும் திருடப்பட்ட கார், திருச்சியில் மீட்கப்பட்டது. அவரை சிறையில் அடைத்த போலீசார், வினோத்தை தேடி வருகின்றனர்.
பூட்டை உடைத்து 6 சவரன் திருட்டு
மாங்காடு: மாங்காட்டை அடுத்த மேல் ரகுநாதபுரத்தைச் சேர்ந்தவர், கோவிந்தசாமி. இவரது மனைவி திவ்ய பிரியா, 34; தனியார் பள்ளி ஆசிரியை. நேற்று முன்தினம் இரவு, கீழ் தளத்தில் உள்ள வீட்டை பூட்டி, மேல் தளத்தில் உள்ள வீட்டில் துாங்க சென்றனர். நேற்று காலை பார்த்தபோது, கீழ்தள வீட்டின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள், ஆறு சவரன் நகையை, திருடிச் சென்றது தெரிய வந்தது. மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.வாலிபரிடம் மொபைல் பறிப்புஆயிரம்விளக்கு: கோல்கட்டாவைச் சேர்ந்தவர், ராகுல் ராய், 20. நேற்று முன்தினம் இரவு, நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையோரம் நின்றிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது மொபைல் போனை பறித்து தப்பினர். ஆயிரம்விளக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
செயின் பறித்தவர்களுக்கு வலை
திருமுல்லைவாயல்: திருமுல்லைவாயல், தென்றல் நகரைச் சேர்ந்தவர், சுகுமார், 35; தனியார் நிறுவன ஊழியர்.இவரது மனைவி வேதவல்லி, 30; அழகு கலை நிபுணர். இவரது கடை, அதே பகுதியில் உள்ள, 7வது தெருவில் உள்ளது. நேற்று மதியம், 3:00 மணியளவில் வேதவல்லி தன் கடைக்கு நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவரது 2.5 சவரன் தாலி செயின் மற்றும் 1.5 சவரன் செயினை பறித்து தப்பினர். திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.7 பேருக்கு, 'குண்டாஸ்'சென்னை: கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர், பிரதீப் குமார், 25, வியாசர்பாடியைச் சேர்ந்தவர், ரமேஷ், 25. ரவுடிகளான இவர்கள், கொலை வழக்கில் சிக்கி, புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அங்கு ஏற்பட்ட தகராறில், ரவுடி பாக்சர் முரளி என்பவரை தீர்த்துக்கட்டினர்.அதேபோல், கொலை குற்றவாளியான, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த, மணிகண்டன், 30, குன்றத்துாரைச் சேர்ந்த, விபசார புரோக்கர், பார்த்திபன், 29, ஆகியோரை, போலீசார் நேற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
கஞ்சா விற்றவருக்கு, 'கம்பி'
எண்ணுார்: எண்ணுார் போலீசார், நேற்று முன்தினம் காலை, எண்ணுார் விரைவு சாலை, தாழங்குப்பம் பீச் ரோட்டில், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அங்கு, இருசக்கர வாகனத்துடன், சந்தேகத்திற்கு இடமான வகையில், நின்றவரை பிடித்து விசாரித்தனர். இதில், கஞ்சா விற்றது தெரிய வந்தது. இது தொடர்பாக, என்.டி.ஓ., குப்பத்தைச் சேர்ந்த, ராஜேந்திரன், 25, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 1.2 கிலோ கஞ்சா பொட்டலங்கள், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
கேரள வாலிபர்கள் கைது
மயிலாப்பூர்: கேரள மாநிலம், காசர்கோடைச் சேர்ந்தவர்கள், ஷெரீப், 32, சாம்ஷீர், 38. இவர்கள், இரு தினங்களுக்கு முன், தென் கொரியாவுக்கு செல்ல, மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள, அந்நாட்டு துணை துாதரகத்தில், விசா பெற, ஆவணங்களை தாக்கல் செய்தனர்.துணை துாதரக அதிகாரிகள், அந்த ஆவணங்களை சரிபார்த்தபோது, போலி என, தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பின், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும், மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.