காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த மதகடி கிராமத்தில், குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் நேற்று மாலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.காட்டுமன்னார்கோவில் அடுத்த கு.பூவிழந்தநல்லூர் ஊராட்சிக்கு சொந்தமான மதகடி கிராமத்தில், 10 ஆயிரம் லிட்டர் சேமிப்பு கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு மின் மோட்டார் பழுது ஏற்பட்டு குடிநீர் விநியோகம் தடைபட்டது. பொதுமக்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று மாலை, காலி குடங்களுடன் காட்டுமன்னார்கோவில் - முட்டம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பள்ளி விடும் நேரத்தில் மறியல் நடந்ததால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். காட்டுமன்னார்கோவில் போலீசார் ஹை வே பேட்ரோல் பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து குடிநீர் பிரச்னையை தீர்ப்பதாக உறுதி அளித்தனர். இதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.