சிதம்பரம்: சிதம்பரம் அடுத்த சின்னக்காரை மேட்டில், ஆடுகளை திருட முயன்ற மூன்று பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.சிதம்பரம் அடுத்த சின்னக்காரைமேடு கிராமத்தை சேர்ந்த துரைராஜ் மகன் மைக்கேல் ராஜ், 30; 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.நேற்று முன்தினம் காலையில் 10.00 மணிக்கு, மைக்கேல்ராஜ் வீட்டிற்கு பின்புறம் கொட்டகையில் கட்டியிருந்த ஆடுகளை காரில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் கார் மூலம் திருட முயன்றனர்.ஆடுகள் சத்தத்தை கேட்டு எழுந்த மைக்கேல்ராஜ் சத்தம் போட்டதால், அருகில் இருந்தவர்கள் திரண்டனர். அவர்கள் ஆடு திருடியவர்களை மடக்கி பிடித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் தாலுக்கா போலீசாரிடம் மூவரையும் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் கீரப்பாளையம் மெயின்ரோட்டை சேர்ந்த தேவதாஸ் மகன் அஜித்குமார், 24; மேலகீரப்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் மகன் மணிகண்டன், 23; புவனகிரி பாளையக்கார தெருவை சேர்ந்த குமார் மகன் மணிகண்டன், 19; என்பது தெரியவந்தது.இது குறித்து சிதம்பரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்தனர்.