மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, அரியநாச்சிபாளையத்தில் குப்பைகளுக்கு தீ வைப்பதால், சுகாதாரகேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.மடத்துக்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட ஜோத்தம்பட்டி ஊராட்சி, அரியநாச்சிபாளையத்தில், 500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களால் உருவாகும் கழிவுகள், தெருக்களின் பல இடங்களில் கொட்டப்படுகிறது.
இதில், குறிப்பிடும்படியாக பழைய சினிமா தியேட்டர் பின்புறமுள்ள தெருவில், அதிகளவு குப்பைகள் தேங்குகிறது. இங்கு தேங்கும் குப்பை மற்றும் கழிவுகளுக்கு சில நாட்களுக்கு ஒரு முறை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் ஏற்படும் புகை பல தெருக்களை சூழ்ந்து மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுத்துகிறது. இதற்கு தீர்வாக, தீ வைக்காமல் குப்பைகளை அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகமும், ஒன்றிய நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.