| புது நெல்லு; புது நாத்து! பாரம்பரியமான 'திக்கால்' முறையில் நடவு Dinamalar
புது நெல்லு; புது நாத்து! பாரம்பரியமான 'திக்கால்' முறையில் நடவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஆக
2019
00:08

ஆனைமலை:ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், நாட்டுப்புற பாடல்களுடன், பாரம்பரிய முறைப்படி, முதல் போக நெல் சாகுபடிக்கான நடவுப்பணிகள் துவங்கியுள்ளது.


ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் நெல் விவசாயம் பிரதானமாக உள்ளது. ஆழியாறு அணையில் இருந்து கிடைக்கும் நீரை பயன்படுத்தி, பழைய ஆயக்கட்டு பாசனத்தில் ஆண்டுதோறும், இரண்டு போகத்தில், 3,500 ஏக்கருக்கு நெல் சாகுபடி நடக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆண்டு தோறும், 5,400 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. கடந்த, 2016 - 17ம் ஆண்டுகளில் ஒரு போகத்துக்கு மட்டுமே தணணீர் வழங்கப்பட்டது; 2018ல் இரண்டு போகத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.தாமதமாக பாசன நீர் வழங்குவது, நீர் வழங்காதது உள்ளிட்ட காரணங்களால், பெரும்பாலான விவசாயிகள் தென்னை, மானாவாரி உள்ளிட்ட மாற்றுப்பயிர்கள் சாகுபடிக்கு மாறியதால், நெல் சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்தது.இந்நிலையில், நடப்பாண்டுக்கு இரண்டு போகத்துக்கும் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். முதல்வரின் உத்தரவின் பேரில், முதல் போக சாகுபடிக்கு, ஆழியாறு அணையிலிருந்து கடந்த, 18ம் தேதி நீர் திறக்கப்பட்டது.


பெரும்பாலான விவசாயிகள் பாசன நீரை பயன்படுத்தி, நெல் விதைகளை நாற்றாங்கால் விட்டு வருகின்றனர்.வெப்பரைப்பதி, ரமணமுதலிபுதுார் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் இருக்கும் சில விவசாயிகள், தண்ணீர் திறப்புக்கு முன்பே, 'கோ - 51, ஏ.எஸ்.டி., ஏ.எல்.ஆர்.டி.,' உள்ளிட்ட நெல் ரகங்களை, நாற்றாங்கால் விடும் பணியை துவங்கினர்.


இப்பகுதிகளில், நெல் நாற்று நடவு பருவத்தை அடைந்து உள்ளன. நாற்றாங்காலில் இருந்து பறிக்கப்பட்டு நாற்று நடும் பணியும் துவங்கியுள்ளது.வெப்பரைப்பதி பகுதியில் பழமையான 'திக்கால்' எனப்படும் முறையில் நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வயதான பெண்கள் நாட்டுப்புற பாடல்களை பாட, அவர்களுடன் இருந்த மற்ற பெண்களும் பாடல்களை பாடிக்கொண்டே, பழமையை மீட்டெடுக்கும் விதமாக நெல் நாற்றுகளை நடவு செய்தனர்.தொழில்நுட்ப வளர்ச்சியால் பெரும்பாலான விவசாயிகள் டிராக்டரில் சேற்று உழவு ஓட்டி, இயந்திர மற்றும் அணி நடவு முறையில், நெல் நடவு மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு மத்தியில் இன்றும் சிலர் பழமையை மறக்காமல் உள்ளது, நாட்டுப்புற பாடல்களையும், பாரம்பரிய நடவு முறைகளையும் அழியாமல் காக்கிறது.


இரண்டாம் போகம் எதிர்பார்ப்பு!விவசாயிகள் கூறியதாவது:முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் வழங்கியதை போல, இரண்டாம் போக சாகுபடிக்கும் தண்ணீர் வழங்க வேண்டும். சேற்று உழவுக்கு வேளாண் பொறியியல் துறையினர் டிராக்டர் வழங்க வேண்டும். அதேபோல், அறுவடைப்பருவத்தில் குறைந்த வாடகையில், அறுவடை இயந்திரங்கள் வழங்க வேண்டும்.நடப்பாண்டுக்கு நோய் தாக்குதல்கள் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் வேளாண்துறையினர், நெல் சாகுபடி வயல்களில் கண்காணிப்பு மேற்கொண்டு, நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த அறிவுரைகள் வழங்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X