தாம்பரத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்கு...இறுதி கெடு!: ரூ.23 கோடி நிலுவை வரியை வசூலிக்கவும் முயற்சி;செப்., 30ல் குடிநீர் இணைப்பை துண்டிக்க திட்டம் | சென்னை செய்திகள் | Dinamalar
தாம்பரத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்கு...இறுதி கெடு!: ரூ.23 கோடி நிலுவை வரியை வசூலிக்கவும் முயற்சி;செப்., 30ல் குடிநீர் இணைப்பை துண்டிக்க திட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 செப்
2019
00:43

தாம்பரம்:தாம்பரம் நகராட்சியில் உள்ள வீடுகள், தனியார் மற்றும் அரசு கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க மற்றும் நிலுவையில் உள்ள வரி பாக்கியை செலுத்த, இம்மாதம், 30ம் தேதி கடைசி என, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தவறும் பட்சத்தில், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என, நகராட்சி எச்சரித்துள்ளது.தாம்பரம் நகராட்சியில் உள்ள, 39 வார்டுகளில், 45 ஆயிரத்து 567 குடியிருப்புகள் உள்ளன. இது தவிர, 4,000க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகள் உள்ளன. நுாற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் உள்ளன.தமிழகத்தில், இரண்டு ஆண்டுகளாக, போதிய மழை இல்லாததால், இந்தாண்டு கோடையில், கடுமையான வறட்சி ஏற்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்தது. பல ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் குடிநீர் பற்றாக்குறையால், தற்காலிகமாக மூடப்பட்டன.இவை அனைத்திற்கும், மழை இல்லாததுடன், நிலத்தடி நீர் மட்டம் வறண்டதும், முக்கிய காரணம் என, பரவலான புகார்கள் எழுந்தன.


20 குழுக்கள்


இதனால், நிலத்தடி நீரை பாதுகாக்க, அனைத்து வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிலும், கட்டாயம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தொட்டி கட்டும் முயற்சியில், தாம்பரம் நகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதேபோல், நிலுவையில் உள்ள வரியை வசூலிக்கும் பணிகளும், முடுக்கி விடப்பட்டு உள்ளன.இது குறித்து, நகராட்சியின் பொறுப்பு கமிஷனரும், பொறியாளருமான, மு.கருப்பையா ராஜா கூறியதாவது:வீடுகள், அரசு மற்றும் தனியார் கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு தொட்டி, கட்டாயம் இருக்க வேண்டும். நகராட்சியில், தற்போது, 15 சதவீதம் வீடுகள் மற்றும் கட்டடங்களில் மட்டுமே, மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.தற்போது, 40 சதவீத வீடுகள் மற்றும் கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் இருந்தும், முறையான பயன்பாட்டில் இல்லை. அவற்றை சீரமைப்பதுடன், மீதம் எத்தனை இடங்களில், மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் இல்லை என்பதை கண்டறிய, 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிகளில், நகராட்சியின், 'டிபிசி' மற்றும் 'அனிமேட்டர்ஸ்' பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


வரி பாக்கி


அவர்கள், நாள்தோறும், 50 வீடுகளில் ஆய்வு செய்து, தங்களின் மேற்பார்வையாளர்களுக்கு அறிக்கை அளிக்கின்றனர். மேலும், மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதன் அவசியம் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.வரும், 30ம் தேதிக்குள், அனைத்து வீடுகள் மற்றும் கட்டடங்களிலும், கண்டிப்பாக மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்திருக்க வேண்டும்.


அதேபோல், நடப்பாண்டின், முதல் அரையாண்டிற்கான, வரி செலுத்துவதற்கான கால அவகாசம் முடிந்து, ஒரு மாதத்திற்கும் மேலாகிறது.இதுவரை, 23 கோடி ரூபாய் அளவிற்கு, வரி பாக்கி வர வேண்டியுள்ளது. வரி பாக்கியால், பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பாக்கி வைத்துள்ளோரும், 30ம் தேதிக்குள், நிலுவை தொகையை செலுத்த வேண்டும்.தவறும் பட்சத்தில், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்டோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.தன்னார்வலர்கள் விழிப்புணர்வு!


வீடுகள், அரசு மற்றும் தனியார் கட்டடங்களில், எவ்வாறு மழைநீரை சேகரிப்பது என, துண்டு பிரசுரங்களில் வரைபடம் வரைந்து, நகராட்சி நிர்வாகம், மக்களுக்கு காண்பித்து வருகிறது. மேலும், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வாயிலாக, ஆங்காங்கே ஊர்வலம் நடத்தி, விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.


நடவடிக்கை தேவை!


வரி பாக்கி வசூலிப்பது மற்றும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதில், நகராட்சி முனைப்பு காட்டி வருவது, சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்று உள்ளது.அதேநேரம், காலக் கெடுவிற்குள் உத்தரவை பின்பற்றாதவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும், அதிகாரிகள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்.அப்போது தான், அரசின் முக்கிய திட்டமான, மழைநீர் சேகரிப்பு அமைக்கும் பணி, 100 சதவீதம் சாத்தியமாகும்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X