மாதவரம்:குடிநீர், பாதாள சாக்கடை குழாய் இணைப்புக்காக வெட்டப்படும் சாலையை சீரமைக்க, பணம் செலுத்தாத குடிநீர் வாரியத்தின் அட்டகாசத்தால், பொதுமக்கள் விபத்துகளில் சிக்குகின்றனர்.
1br@சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம், 26, 27, 28, 33 வார்டுகளில், குடிநீர் இணைப்புக்காக, சென்னை குடிநீர் வாரியத்தினர், இரவோடு இரவாக, எந்த அனுமதியும் இன்றி, சாலைகளை வெட்டி, இணைப்புகளை கொடுக்கின்றனர்.அதற்காக, நுகர்வோரின் அவசர தேவையை பயன்படுத்தி, அவர்களிடம், 40 ஆயிரம் ரூபாய் வரை, முறைகேடாக பணம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, 26, 33வது வார்டுகளில், குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புக்காக வெட்டப்பட்டு, பல சாலைகள் சேதமடைந்து உள்ளன.இணைப்பு பணிகள் முடிந்ததும், அவற்றை அவசரமாக, மண் நிரப்பி மூடி விடுகின்றனர். ஆனால், குடிநீர் வாரியம், தங்கள் பணி முடிந்த சாலைகளுக்கான சீரமைப்பு கட்டணத்தை, மாநகராட்சிக்கு செலுத்துவதில்லை.இதனால், அந்த சாலைகளை, மாநகராட்சிசீரமைப்பதில்லை.
உதாரணத்திற்கு, தணிகாசலம் நகர், 'எப்' பிளாக், முதல் பிரதான சாலையில், குடிநீர் வாரிய பணிக்காக, 125 அடி நீளம், 10.5 அடி அகலத்தில் வெட்டப்பட்டு, இரண்டு மாதத்திற்கு முன் இணைப்பு பணிகள் முடிந்தன. ஆனால், சாலை வெட்டு கட்டணமான, 6.54 லட்சம் ரூபாயை இதுவரை, சென்னை குடிநீர் வாரியம், மாநகராட்சிக்கு செலுத்தவில்லை.
இது குறித்து, மாதவரம் பகுதி, குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் விசாரித்த போது, பதில் அளிக்க மறுத்து, 'உயரதிகாரிகளிடம் விசாரித்து கொள்ளுங்கள்' என்றனர்.அரைகுறையாக மண் மூடப்பட்ட சாலைகள், அவ்வப்போது பெய்யும் மழை மற்றும் கழிவு நீர் தேக்கம் ஆகியவற்றால், புதைகுழிகளாக மாறி விடுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கி பாதிக்கின்றனர்.
அலட்சியம்
இந்த மண்டலம் முழுக்க, குடிநீர் வாரிய பணிக்காக வெட்டப்பட்ட, 30க்கும் மேற்பட்ட சாலைகள் சேதம் அடைந்துள்ளன. அவர்கள், சாலைகளை வெட்ட அனுமதி பெறுவதில்லை. பல இடங்களில், மாநகராட்சியின் புதிய சாலைகளும் சேதமடைந்து உள்ளன. இதுவரை, சாலை வெட்டு கட்டணம், 50 லட்சம் ரூபாய் வரை, நிலுவையில் உள்ளது. இப்படி இருந்தால், எந்த நிதி மூலம், சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது.
மாநகராட்சி அதிகாரிகள், மாதவரம்
விசாரணை
மாதவரத்தில், பாதாள சாக்கடை திட்டம் சரியாக செயல்படவில்லை. ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு, தற்காலிக நடவடிக்கை மூலம், கழிவு நீரை வெளியேற்றுகின்றனர். மேலும், முறைகேடான குடிநீர் குழாய் இணைப்பு, சாலை வெட்டு ஆகியவற்றால், பல சாலைகள் சேதமடைந்துள்ளன. குறித்து, குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர், நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.
குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு, மாதவரம்
விபத்து
மாதவரத்தில், ஆங்காங்கே ஏற்படும், பாதாள சாக்கடை அடைப்பால், கழிவு நீரை மாற்று வழியில் வெளியேற்ற, சாலையை ஆக்கிரமித்து, குழாய்கள் அமைக்கப்படுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள், மாற்றுத்திறனாளிகள் என பலரும், விபத்தில் சிக்கி பாதிக்கின்றனர்.