| விமான நிலைய விரிவாக்கத்திட்ட இழுபறியால்... 8 ஆண்டுகள் ஓடிடுச்சே!இணைந்து செயலாற்றினால் தொழில்துறை வளரும் Dinamalar
விமான நிலைய விரிவாக்கத்திட்ட இழுபறியால்... 8 ஆண்டுகள் ஓடிடுச்சே!இணைந்து செயலாற்றினால் தொழில்துறை வளரும்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 செப்
2019
02:31

கோவை:கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்டம் அறிவிக்கப்பட்டு, எட்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. நிலம் கையகப்படுத்தும் பணி, இன்னும் இழுபறியாகவே இருக்கிறது. திட்டத்தை விரைந்து செயல்படுத்தினால், தொழில் வளர்ச்சி மேலும் பன்மடங்கு அதிகரிக்கும்.தமிழகத்தின் பிரதான தொழில் கேந்திரமாக இருந்தும், கோவையில் இருந்து, நேரடியாக வெளிநாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்வதும், இறக்குமதி செய்வதும், மிகவும் சிரமமான நிலையே உள்ளது. இதற்கு காரணம், இங்குள்ள விமான நிலையத்தில் இருந்து, மிக குறைந்த எண்ணிக்கையிலேயே, சர்வ தேச விமானங்கள் இயக்கப்படுகின்றன.விமான நிலைய ஓடுபாதை நீளம் குறைவாக இருப்பதால், சிறிய அளவிலான விமானங்களே வந்து செல்ல முடியும்.பெரிய விமானங்கள்,சரக்கு விமானங்கள் வந்து செல்ல வேண்டுமெனில், தற்போதுள்ள, 9,000 அடி நீளம் கொண்ட ஓடுபாதையை, 12,500 அடி நீளம் கொண்டதாக விரிவு படுத்த வேண்டும்.


எவ்வளவு நிலம் தேவை?

விரிவாக்கத் திட்டம், 2006ல் உருப்பெற்றது; 2011ல் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அப்போது, 627 ஏக்கர் நிலம் தேவைப்படும் என கணக்கிடப்பட்டது. இழப்பீடு தொகையை கணக்கிட்ட, விமான நிலைய ஆணையம், தேவைப்படும் நிலத்தை குறைக்க ஆரம்பித்தது.முதலில், '365 ஏக்கர் போதும்' எனவும், மற்றொரு முறை, '468 ஏக்கர் போதும்' எனவும், விமான நிலைய ஆணையம் தெரிவித்தது.தமிழக அரசோ, '627 ஏக்கர் நிலம் எடுத்துக் கொடுக்கிறோம்' என, மத்திய சிவில் விமான போக்கு வரத்து துறையிடம் கூறி வருகிறது. விமான நிலைய ஆணையமோ, சிவில் விமான போக்கு வரத்து துறையோ, பதிலளிக்காத நிலையில், நிலம் எடுப்பு பணியும், இழப்பீடு வழங்கும் பணியும் ஆமை வேகத்தில் நகர்கிறது.இழப்பீடு எதிர்பார்ப்பு


விரிவாக்கப் பணிக்கு, கையகப்படுத்த திட்டமிட்ட, 627 ஏக்கர் நிலம், 24 தொகுதிகளாக பிரிக்கப் பட்டன. இதில், ஒரு தொகுதிக்கு உட்பட்ட, 140 ஏக்கர் நிலம், பாதுகாப்புத்துறைக்கு சொந்தமானது. அதை கையகப்படுத்துவதில், எந்த பிரச்னையும் இல்லை.மற்ற,23 தொகுதிகளில்,7ம் தொகுதிக்கு உட்பட்ட நில உரிமையாளர்களுக்கு மட்டும், இழப்பீடு வழங்கப்பட்டது. 1, 3, 11, 12, 20 ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க, அரசுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது.இதற்கான தொகை, 500 கோடி ரூபாய் இன்னும் சில நாட்களில் வந்து விடும் என, பல மாதங்களாக அரசு அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஆனால், தொகை வந்தபாடில்லை. மற்ற தொகுதிகளுக்கான இழப்பீடு தொகை பெற, இனி ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
விரக்தியில் தொழில்துறை


விரிவாக்க திட்டம், ஆமை வேகத்தில் நகர்வதால், கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி போன்ற பகுதிகளை சேர்ந்த தொழில்முனைவோர், ஏற்றுமதியாளர்கள், விமான பயணிகள் விரக்தியில் உள்ளனர்.எதிர்பார்ப்புக்கு ஏற்ப, விமான நிலையம் விரிவாக்கப்பட்டால், இப்பகுதி தொழில் வளர்ச்சி பன்மடங்கு அதிகரிக்கும். எனவே, ஆணையமும், அரசும் இணைந்து, பணியை விரைவுபடுத்த வேண்டும் என்பதே, அனைத்துதரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.காலத்தின் கட்டாயம்


கோவை கஸ்டம் ஹவுஸ் அண்டு ஸ்டீமர் ஏஜென்டுகள் சங்க தலைவர் சுப்பிரமணியம் கூறியதாவது:கோவையில், ஏர் இந்தியா தவிர்த்து, சில்க் ஏர், ஏர் அரேபியா, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களே சர்வதேச சேவை அளிக்கின்றன. இவை, பயணிகள் விமானம் என்பதால், குறைந்த அளவிலான சரக்கு மட்டுமே அனுப்ப முடியும். அதனால், சென்னை, கொச்சி, திருவனந்தபுரத்துக்கு சரக்குகளை அனுப்ப வேண்டிய நிலை உள்ளது.இதற்கு தீர்வு காண, விமான நிலையம் விரிவாக்கப்பட்டால், புதிய விமான சேவை வரும். தொழில் துறைக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும்; ஏற்றுமதியாளர்கள், கோவையில் இருந்தே, சரக்குகளை, வெளிநாடுகளுக்கு அனுப்ப வாய்ப்பு ஏற்படும்.தொழில்துறைக்கு கேந்திரமான பகுதி என்பதாலும், விரைவாக வளர்ச்சி பெறும் பகுதி என்பதாலும், கோவை புறநகர் பகுதியில் மாற்று விமான நிலையம் உருவாக்க வேண்டும் அல்லது உடனடியாக விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.மாற்றிடம் யோசிக்கலாம்


பெங்களூருவில், நகர்ப்பகுதியில் இருந்து, 40 கிலோ மீட்டருக்கு அப்பால், அனைத்து வசதிகளுடன் பிரமாண்டமாக விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து முன்னணி நிறுவனங்களும் விமானங்கள் இயக்குகின்றன.அதுபோன்ற விமான நிலையம், பல்லடம் போன்ற நெரிசலற்ற, குறைந்த விலையில் நிலம் கிடைக்கும் இடத்தில் அமைக்கப்பட்டால், கூடுதலாக பயன் கிடைக்கும் என்ற கருத்து, ஒரு தரப்பினர் மத்தியில் உள்ளது.சென்னை, கொச்சி, திருவனந்தபுரம் என, பல நுாறு கிலோமீட்டருக்கு அப்பால், சரக்குகளை கொண்டு செல்வதை காட்டிலும், பல்லடம் போன்ற இடத்துக்கு கொண்டு செல்வது வசதியானது என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X