| அடுப்பில்லா உணவுகள்: அசத்திய மாணவர்கள் Dinamalar
அடுப்பில்லா உணவுகள்: அசத்திய மாணவர்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2019
02:01

சிவகாசி: உணவு வகைகளில் எத்தனையோ உள்ளன. சைவம் மற்றும் அசைவ உணவுகளை அவரவர் ருசிக்கேற்ப தயாரித்து சாப்பிடுவர்.


பெரும்பாலும் விடுமுறை நாட்களில் வீட்டில் சமைக்காமல் வெளியில் ஓட்டலில் சென்று சாப்பிடுவோர் ஏராளாம். ஏனெனில் வீட்டில் ஒரே மாதிரியான உணவு வகைகள் மட்டுமே சமைப்பர். வீட்டில், ஓட்டலில் தயாரிக்கப்படும் அனைத்து உணவுகளுமே பெரும்பாலும் அடுப்பினைப் பயன்படுத்தியே தயாரிக்கப்படுவது வழக்கம்.


உணவு தரம் மற்றும் கட்டுப்பாடுகளை அடிப்படையாக கொண்டு 'ஈட் ரைட் இந்தியா' என்ற இயக்கம் மத்திய அரசினால் நடத்தப்படுகிறது. இந்த இயக்கத்தின் சார்பாக 'ஈட் ரைட் மேளா 19' என்ற தலைப்பில் நெருப்பில்லா சமையல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநிலங்களில் பல இடங்களில் இதற்கான போட்டிகள் நடைபெறுகிறது.


அந்த வகையில் சிவகாசி பெல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லுாரியில் அடுப்பில்லாமல் பல்வேறு உணவுகள் தயாரிக்கும் போட்டி நடந்தது.70 க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அடுப்பினை பயன்படுத்தாமல் பல்வேறு உணவுகளை மாணவர்கள் தயாரித்து மகிழ்ந்தனர்.


அவல் லட்டு, காஜீ கதலி, அரதோல் ப்ரோஸ், பொட்டு கடலையில் செய்யப்பட்ட பர்பி, வெள்ளரி, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் பயன்படுத்தி சூப்கள், தர்பூசணியால் செய்யப்பட்ட பீட்சா போன்ற உணவுகளை மாணவர்கள் வித விதமாக தயாரித்தனர். இவை மட்டுமல்லாது குளிர்பானங்களும் தயாரித்தனர். இதன் முக்கிய நோக்கமே விறகு, கேஸ், எந்தஒரு எலக்ட்ரிக் சமையல் சாதனங்கள் பயன்படுத்தாமல் உணவு தயாரிப்பதே.


நல்ல புரிதல் உருவானது


அடுப்பில்லாமல் சமைக்கும் இந்த உணவு போட்டி என்னை மிகவும் ஈர்த்தது. அவல் பாயாசம், கார அவல் புட்டு, பச்சை பயறு மற்றும் கடலையால் செய்யப்பட்ட சாலட், இயற்கை முறையில் செய்யப்பட்ட பீட்ரூட், அலுவோரா , அருகம்புல் புளி போன்றவற்றிலிருந்து குளிர்பானங்கள் தயாரித்தேன். மாணவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் எங்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டது.

ஜான்சன், டிப்ளமோ முதலாமாண்டு மாணவர்.


சவாலான அனுபவம்


நான் இதுவரை அடுப்பை உபயோகித்தே சமையல் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். முதன்முறையாக நெருப்பில்லாமல் உணவுகளை தயாரித்தேன். இது சவாலான அனுபவமாக இருந்தது. அவல் லட்டு, எண்ணெய் கடலை, வெஜ் சாண்ட்விஜ் , எலுமிச்சை சாறு போன்றவற்றை அடுப்பினை பயன்படுத்தாமல் செய்தேன். இவைகளை வீட்டிலேயே எளிமையாக செய்து கொள்ளலாம்.


ஸ்ரீரஞ்சனி, டிப்ளமோ 2 ம் ஆண்டு மாணவி.


முதல் போட்டியே வித்தியாசம்


நான் இதுவரை எந்த சமையல் போட்டிகளிலும் கலந்து கொண்டதில்லை. முதல் போட்டியே வித்தியாசமானதாக இருந்தது. நெருப்பில்லாமல் இத்தனை உணவு பொருட்களை தயார் செய்ய முடியும் என அறிந்து கொண்டேன். பொட்டு கடலை பர்பி, ஸ்வீட் கார்ன் சார்ட் , சாக்லேட் மில்க் சேக் உணவுகளை தயாரித்தேன்.


மிருதுளா, பி.எஸ்சி., முதலாமாண்டு மாணவி.


புதுமையான உணவு ஆர்வம்


நான் பல விதமான சமையல் போட்டிகளில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் பங்கேற்று பரிசு பெற்றுள்ளேன். ஆனால் இந்த போட்டி மிகவும் புதுமையாக இருந்தது. புதிது புதிதாக கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. ஸ்காட்டிஷ் நாட்டின் குளிர்பானமான அர்தோஷ் ப்ரோஷ் தயாரித்தேன். குழந்தைகளுக்கு விருப்பமான ஓரியோ கேக் , உதங்கள் லட்டு தயாரித்தேன். மேலும் பல புதுமையான உணவு வகைகளை தயாரிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.


சங்கீதா, பி.எஸ்சி., 3 ம் ஆண்டு மாணவி,

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X