| தரைதள தொட்டியை சுற்றி கழிவுநீர் பகலிலே கடித்து குதறும் 'கொசு'க்கள் அலறும் அரசகுளம் மக்கள் Dinamalar
தரைதள தொட்டியை சுற்றி கழிவுநீர் பகலிலே கடித்து குதறும் 'கொசு'க்கள் அலறும் அரசகுளம் மக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2019
02:03

காரியாபட்டி:தரைதள தொட்டியை சுற்றி கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தியாகி பகலிலே கடிப்பதால் அரசகுளம் மக்கள் தினமும் பாதிப்பை சந்திக்கின்றனர்.


காரியாபட்டி அரசகுளத்தில் வாறுகால் வசதி, சிமின்ட் ரோடு, பேவர் பிளாக் என எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடையாது. வீட்டிலிருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் தெருவில் ஆறாக ஓடுகிறது. கழிவு நீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் ஏற்பட்டு கொசு உற்பத்தியாகி, பகலிலே கடிக்கும் நிலை உள்ளது.


மழை நேரத்தில் தெருக்களில் சகதியுமாக மாறி ஆட்கள் நடப்பதற்கே சிரமப்படுவர். மூன்று நாட்களுக்கு ஒரு முறை வரும் தாமிரபரணி குடிநீரை பிடிக்க பெண்கள் போட்டி போடும் அவல நிலையில் உள்ளனர். விவசாயம் இல்லை. நுாறு நாள் வேலையில் கிடைக்கும் வருவாயை கொண்டு பிழைப்பு நடத்துவதால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த சிரமப்படுகின்றனர். புழக்கத்திற்கான உப்புத் தண்ணீரும் பற்றாக்குறையாக இருப்பதால் தண்ணீரை பிடிக்க கடுமையான போட்டி நிலவுகிறது. வாறுகால் வசதி, தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


குடிநீரை பிடிக்க காலி டப்பா


போதிய குடிநீர், புழக்கத்திற்கான தண்ணீர் பற்றாக்குறையாக இருப்பதால் இங்குள்ள சுகாதார வளாகம் பயன்படுத்த முடியாமல் உள்ளது. திறந்த வெளியை நாடுவதால் தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. தரைதள தொட்டியை சுற்றி கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. குடிநீரை முந்தி பிடிக்க குழாயடியில் காலி டப்பாக்களை கட்டி வைக்க வேண்டிய அவல நிலை உள்ளது. கூடுதலாக குடிநீர், தரை தள தொட்டி அமைக்க வேண்டும்.


முத்துராமலிங்கம், விவசாயி.


வீதியில் தேங்கும் கழிவு நீர்


வாறுகால் வசதி இல்லாததால் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவு நீர் வீதியில் தேங்கி நிற்கிறது. கொசு உற்பத்தி, பகலிலே கடிக்கும் நிலை உள்ளது. தெருவில் ஆட்கள் நடமாட சிரமப்படுகின்றனர். சிமென்ட் ரோடு, பேவர் பிளாக் வசதி செய்ய வேண்டும். இரண்டு மணி நேரம் வரும் குடிநீரை பிடிக்க ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டு பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. புழக்கத்திற்கான தண்ணீரையும் கூடுதலாக சப்ளை செய்ய வேண்டும் .


பால்பாண்டி, கூலித் தொழிலாளி.


சிரமத்தில் கால்நடைகள்


மழை நேரத்தில் தெருக்களில் சகதியுமாக இருக்கும். ஊருக்குள் நடமாட முடியாது. வாறுகால் வசதி இல்லை. குப்பை நிறைந்து கிடப்பதால் நடப்பதற்கே சிரமமாக உள்ளது. குளியல் தொட்டி சேதமடைந்து கிடக்கிறது. கால்நடைகள் தண்ணீர் இல்லாததால் சிரமப்படுகின்றன. கழிவு நீர், மழை நீரை வெளியேற்ற பெரிய வாறுகால் வசதி செய்ய வேண்டும்.


கிருஷ்ணமூர்த்தி, விவசாயி.


சேதத்தில் கால்வாய் பாலம்


அரசகுளம்-ஆவியூர் ரோடு சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் செல்ல சிரமப்படுகின்றன. கால்வாய் பாலம் சேதமடைந்திருப்பதால் எப்போது விழுமோ என்ற அச்சம் உள்ளது. நுாறு நாள் வேலைத்திட்டத்திற்கு நிரந்தர பணித்தளப் பொறுப்பாளர் வேண்டும். நிழற்குடைசேதமடைந்து பல ஆண்டுகளாக இடியும் நிலையில் உள்ளதால் மழை, வெயில் காலத்தில் மக்கள் சிரமப்படுகின்றனர்.


கார்மேகம், கூலித் தொழிலாளி.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X