ஆர்.கே.பேட்டை:தொடர் மழையால், மேய்ச்சல் புல்வெளிகளில், பசுமை திரும்பி வருகிறது. அதே போல், ஆவாரம் காடுகளும், புதிய துளிர்களுடன்கண்ணுக்கு விருந்து படைத்து வருகின்றன.
கோடையில் கடும் வறட்சியால், மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து கிடந்தன. சில வாரங்களாக, ஆர்.கே.பேட்டை சுற்றுப் பகுதியில் மழை பெய்து வருவதில், நீர்நிலைகள் நிரம்பாவிட்டாலும், நிலம் ஈரத்தன்மையுடன் காணப்படுகிறது.இந்த ஈரம், புல்வெளிகள் மீண்டும் உயிர் பெற போதுமானதாக உள்ளது. இதனால், புல்வெளிகளில் பசுமை திரும்பியுள்ளது. அதேபோல், காப்புக் காடுகளில் உள்ள மூலிகை மரங்களும் செழிப்பாக காணப்படுகின்றன.ஆர்.கே.பேட்டை அடுத்த, எஸ்.வி.ஜி.புரம் பகுதியில் உள்ள மலைச்சரிவுகளில் ஆவாரம் செடிகள், 50 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து வருகின்றன.மருத்துவ குணம் நிறைந்த ஆவாரம் செடியின் இலை, பட்டை, வேர், பூ, காய் என, அனைத்தையும், சித்த மருத்துவம் குறித்த விபரம் தெரிந்தவர்கள், இவற்றை சேகரித்து, முறையாக பயன்படுத்தி வருகின்றனர்.கிராமத்திற்கு அருகில், இயற்கையாக கிடைக்கும் ஆவாரம் செடியின் பயனை, ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பலரும் அனுபவித்து வருகின்றனர்.கோடையில் காய்ந்து வளம் குன்றிய ஆவாரம் காடு, தற்போதைய மழையால், மீண்டும் தன்பசுமையை மீட்டெடுத்துள்ளது.