சிவகங்கை:சென்னை உயர்நீதிமன்றம் மனிதர்களின் ரத்தம் வேணுமா.... என 'குட்டு' வைத்தும், சிவகங்கையில் பொது இடங்களை ஆக்கிரமித்து வைத்துள்ள பேனர்களை அகற்ற அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை என புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசியல் கூட்டம், காதுகுத்து, கல்யாணம், சங்க விழா என அனுமதியின்றி ரோட்டை ஆக்கிரமித்து பேனர்கள் வைக்கும் கலாசாரம் தொற்றி கொண்டது. எவ்வளவு தான் நீதிமன்றம் குட்டு வைத்தாலும், அதிகாரிகளும் இதை தடுப்பதாக தெரியவில்லை. இதன் விளைவே கோயம்புத்துாரில் பேனர் விழுந்து இளைஞர் ரகு பலி, சென்னை பள்ளிக் கரணையில் பேனர் விழுந்து டூவீலரில் சென்ற இளம் பெண் சுபஸ்ரீ பலியாகினர். இந்த சம்பவத்தால் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தியின் உச்சத்திற்கே சென்று, கடும் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு பின்னரும் சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களை அகற்ற அதிகாரிகள், போலீசார் அக்கறை காட்டவில்லை என புகார் எழுந்துஉள்ளது. அந்த வகையில் தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட், காரைக்குடி, சிவகங்கை காஞ்சிரங்கால் உட்பட மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பேனர்கள் வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.கலெக்டர் ஜெயகாந்தன், விதியை மீறி பேனர் வைப்போருக்கு ஒரு ஆண்டு சிறை, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் என அறிவித்தும், பேனர் கலாசாரத்திற்கு சிவகங்கையில் முற்றுப்புள்ளி அதிகாரிகள் இன்னும் அக்கறை செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது.கலெக்டர் ஜெயகாந்தன், உயர்நீதிமன்றம் 'குட்டு' வைக்கும் முன் மாவட்டத்தில் பேனர் கலாசாரத்தை ஒழிக்க நடவடிக்கை எடுப்பாரா.