சேலம்: வங்கிகள் இணைப்பு முடிவை கைவிடக்கோரி, வங்கி அதிகாரிகள் சங்கங்கள், வரும், 26, 27ல், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக எச்சரித்துள்ளன.
யூனியன் வங்கி அதிகாரிகள் சங்க, தமிழ் மாநில ஒன்பதாவது மாநாடு, சேலத்தில் இரண்டாம் நாளாக நேற்று நடந்தது. அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க, பொதுச்செயலர் நாகராஜன் பேசியதாவது: மத்திய அரசு, 10 வங்கிகளை நான்காக இணைப்பது குறித்து, வாடிக்கையாளர், ஊழியர்கள், அதிகாரிகளிடம் ஆலோசிக்கவோ, கருத்து கேட்கவோ இல்லை. லோக்சபா ஒப்புதல் கூட பெறாமல், தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே, பாங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி இணைப்புக்கு எதிராக சங்கம் தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை. அதற்குள், வங்கிகள் இணைப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், வங்கி சேவை குறையும். ஆயிரக்கணக்கான கிளைகள் மூடப்படும். ஊழியர்கள் மாற்றப்படுவர். வேலை உத்தரவாதம் பறிபோகும். நிரந்தர வேலைக்கூடாது என்பதற்காகவே வங்கி இணைப்பு நடவடிக்கை. அத்துடன், தனியார் மயமாக்கும் முயற்சி, வங்கிகள் இணைப்பை எதிர்த்தும், மத்திய அரசின் போக்கை கண்டித்தும் வரும், 26, 27ல், நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம். அதிகாரிகளுக்கான நான்கு சங்கங்கள் இணைந்து, 25ல் இரவு தொடங்கி, 27 இரவு வரை, 48 மணி நேரம் வேலைநிறுத்தம் நடக்கும். இதுகுறித்த அறிவிப்பு, மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. போராட்டத்தில், மூன்று லட்சத்து, 78 ஆயிரத்து, 783 அதிகாரிகள் பங்கேற்பதால், ஒரு லட்சத்து, 40 ஆயிரத்து, 482 வங்கி கிளைகளில் பரிவர்த்தனை நடக்காது. அதேநேரம், பணிக்கு வரும் ஊழியர்களை தடுக்க மாட்டோம். அதிகாரிகளின்றி, ஊழியர்களால் செயல்பட முடியாது. இருந்தும், டிஜிட்டல் பரிவர்த்தனையால், 63 சதவீத பரிமாற்றம் நடக்கும். வாராக்கடன், 10 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க கடும் நடவடிக்கை தேவை. மத்திய அரசு, தன் முடிவை மாற்றிக்கொள்ளாவிட்டால், நவம்பர் இரண்டாவது வாரத்தில், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.