சேலம்: ''ராணுவத்தில், இளைஞர்கள் அதிகளவில் சேர வேண்டும்,'' என, கர்னல் ராகேஷ்காளியா தெரிவித்தார்.
சேலத்தில், 73வது மீடியம் ரெஜிமெண்ட் பீரங்கி படையினரின், முன்னாள் ராணுவ வீரர்கள் சந்திப்பு கூட்டம், நேற்று நடந்தது. கர்னல் ராகேஷ்காளியா தலைமை வகித்தார். அதில், பல்வேறு மாநிலங்களிலிருந்து பங்கேற்ற, பீரங்கிபடை முன்னாள் வீரர்கள், நாட்டுப்பற்றை வலியுறுத்தும் பணி அனுபவம், பணி காலத்தில், எதிர்நோக்கிய பிரச்னை, மறக்க முடியாத நிகழ்வுகளை நினைவுகூர்ந்தனர். தொடர்ந்து, பீரங்கிபடையில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள், அவர்களது குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர். இதுகுறித்து, கர்னல் ராகேஷ்காளியா கூறியதாவது: ஆண்டுதோறும், 23வது படைப்பிரிவின், பீரங்கிபடை முன்னாள் படைவீரர்கள், தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள, இக்கூட்டம் நடத்தப்படுகிறது. ஏதாவது ஒரு மாநிலத்தில், இந்த சந்திப்பு நடத்தப்படும். நடப்பாண்டு, சேலத்தில் நடந்தது. படைப்பிரிவின் வீரர்கள், பசுமை நினைவுகளை பகிர்ந்து, பாராட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது. இளைஞர்கள், ராணுவத்தில் அதிகளவில் சேர்ந்து, நாட்டுக்காக உழைப்பதை ஊக்கப்படுத்த, நாட்டுப்பற்றை, இக்கூட்டம் வெளிக்கொணர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.