சேலம்: சுங்கச்சாவடியில், ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தும் திட்டத்தை கொண்டு வர, சேலம் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சேலத்தில், மாவட்ட, லாரி உரிமையாளர் சங்க, 71வது மகா சபை கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் சென்னகேசவன், செயலாளர் தனராஜ் தலைமை வகித்தனர். அதில், சேலத்தில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படும் நிலையில், குண்டு செட்டி லாரி ஸ்டாண்டை, வேறு இடத்துக்கு மாற்ற மாநகராட்சி, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; தினமும் டீசல் விலையை, ஆயில் நிறுவனங்கள் மாற்றியமைப்பதால் லாரி உரிமையாளர்கள் வாடகையை நிர்ணயிக்க முடிவதில்லை. அதனால், மாதம் ஒருமுறை மாற்றியமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பெட்ரோல், டீசல் விலையை, ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வர வேண்டும். ஏப்ரல், செப்டம்பரில் சுங்கச்சாவடிகளில், 10 முதல், 15 சதவீத கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆண்டுதோறும் வாகன எண்ணிக்கை, 14 முதல், 18 சதவீதம் உயர்கிறது. அதனால், சுங்கச்சாவடி கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்துவதை கைவிட வேண்டும். சேலம் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில், ஓமலூரில் சட்டத்துக்கு புறம்பாக உள்ள சுங்கச்சாவடியை மூட வேண்டும். மேலும், சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.