காரைக்குடி : காரைக்குடி நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக 15 அடி ஆழம் வரை தோண்டி பள்ளத்தை பல மாதங்களாக மூடாமல் இருப்பதால் வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.
நகராட்சி நிர்வாகம் விரைந்து பணி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.காரைக்குடி நகரில் ரூ.112 கோடியில் 155 கிலோ மீட்டர் துாரத்திற்கு பாதாள சாக்கடைக்கான குழாய் பதிக்கும் பணி 2 ஆண்டாக நடக்கிறது. இதற்காக ரோடுகள், தெருக்களில் பள்ளம் தோண்டி குழாய் பதித்தல், கழிவுநீர் சேகரிப்பு தொட்டி கட்டும் பணி நடந்து வருகிறது. நகராட்சி நிர்வாகம் ஒவ்வொரு தெருவாக தேர்வு செய்து, பணிகளை முழுமையாக முடித்த பின், அடுத்த தெருக்களில் பணிகளை துவக்க வேண்டும்.
ஆனால், இங்கு அனைத்து தெரு, ரோடுகளில் பள்ளம் தோண்டி வைத்து பல மாதங்களாக குழாய் பதிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் இரவில் வாகனங்களில் வருவோர் இது போன்று திறந்து கிடக்கும் பள்ளங்களில் விபத்து விபத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக முத்துராமலிங்கதேவர் நகர், ரயில்வே ரோட்டில் பாதாள சாக்கடைக்காக 15 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி பல மாதங்களாக மூடாமல் இருப்பதால், விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
இது குறித்து காரைக்குடி ரயில்வே ரோடு முத்துகணேஷ் கூறியதாவது: அரியக்குடி, இலுப்பக்குடி, மாத்துார், உஞ்சனை பகுதியில் இருந்து காரைக்குடிக்கு வரும் பாதையாக உள்ளது. 16 அடி அகலமுள்ள இந்த ரோட்டில் பள்ளம் தோண்டி 8 அடிக்கு தான் பாதையே உள்ளது. இந்த ரோட்டில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் விரைந்து பணியை முடிக்க வேண்டும், என்றார்.