மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு போலீஸ் நிலையம் அருகே மழை நீருடன் கழிவு நீரும் கலந்து தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டு நான்கு முனை சந்திப்பில் உள்ள கடைகள், வீடுகள் மற்றும் அங்காளம்மன் கோவில் தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் போலீஸ் நிலையம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் வழியாக செல்கிறது.இந்த கழிவுநீர் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கழிவு நீர் செல்லும் வழியில் கலந்து ஓடியது. ஆனால், தற்போது கழிவுநீர் செல்லும் வழியில் தனி நபர் ஒருவர் தனக்கு சொந்தமான இடத்தின் வழியே கழிவுநீர் செல்ல அனுமதிக்க மாட்டேன் எனக்கூறி கழிவுநீர் செல்லும் வழியினை மூடினார். இதனால் கழிவு நீர் ஓட வழியின்றி டிரான்ஸ்பார்மரைச் சுற்றிலும் தேங்கி நிற்கிறது.இந்நிலையில், இப்பகுதியில் மழை பெய்து வருவதால், மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலை மற்றும் அருகில் உள்ள கடை, வீடுகளில் புகுந்தன.தகவல் அறிந்த சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமால் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் நேரில் சென்று பார்வையிட்டு, கழிவு நீரை வெளியேற்ற வழி செய்வதாக கூறினர். ஆனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தற்காலிகமான வழி தேவையில்லை. நிரந்தரமாக கழிவு நீர் செல்ல வழி செய்ய வேண்டும் என்றனர்.அதன்பின் தாசில்தார் மற்றும் நெடுஞ்சாலை துணை பொறியாளர் ஆகியோரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். கழிவுநீர் கடைகளில் புகுந்ததால் அப்பகுதியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. வணிகர் சங்கத் தலைவர் செல்வகணேசன், மின் மோட்டார் மூலம் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.