சென்னை:'வேலுார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' என்ற, வி.ஐ.டி., நிகர்நிலை பல்கலை, தேசிய அளவில், மேம்பட்ட சீர்மிகு கல்வி நிறுவனத்துக்கான அந்தஸ்தை பெற்று உள்ளது.
மத்திய அரசின் சார்பில், 20 உயர் கல்வி நிறுவனங்கள், தேசிய அளவில் மேம்பட்ட, சீர்மிகு கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில், வி.ஐ.டி., பல்கலைக்கு, இந்த உயரிய அந்தஸ்து கிடைத்துள்ளது.இது குறித்து, வி.ஐ.டி., பல்கலை வேந்தர், விஸ்வநாதன், நேற்று அளித்த பேட்டி:மத்திய அரசு அறிவித்துள்ள, மேம்பட்ட சீர்மிகு நிறுவனத்துக்கான அந்தஸ்தை, தமிழகத்தில், வி.ஐ.டி., கல்வி நிறுவனம் மட்டும் பெற்றுள்ளது. இந்திய அங்கீகாரம் மட்டுமின்றி, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய வெளிநாடு அங்கீகாரங்களையும், நாங்கள் பெற்றுள்ளோம்.என்.ஐ.ஆர்.எப்., எனப்படும், தேசிய தரவரிசை பட்டியலில், வி.ஐ.டி., நிறுவனம், 17ம் இடம் பெற்றுள்ளது.எங்கள் நிறுவனம், 68 வெளிநாடுகளில் உள்ள, 300 பல்கலைகளுடன் ஒப்பந்தம் செய்து, கல்வி பணி மேற்கொண்டு வருகிறது.சர்வதேச அளவில் வெளியிடப்படும், க்யூ.எஸ்., தர வரிசையில், கற்பித்தல், வேலைவாய்ப்பு வழங்குதல், கல்வி தரம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான பகுதியில், ஐந்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது.வரும் ஆண்டுகளில், சர்வதேச அளவில், 500 உயர்கல்வி நிறுவன பட்டியலுக்குள், இடம் பெறுவோம். எங்கள் கல்வி நிறுவனத்துடன், 719 தொழில்நிறுவனங்கள் இணைந்து செயல்படுகின்றன. இந்த ஆண்டு மட்டும், 3,725 பேருக்கு, 'கேம்பஸ்' முகாமில் வேலைவாய்ப்பு அளித்துள்ளோம். தேசிய அந்தஸ்து கிடைத்துள்ள நிலையில், கல்வி மற்றும் ஆராய்ச்சியின் தரத்தை, சர்வதேச அளவில் முன்னிலை படுத்துவோம். இவ்வாறு, அவர் கூறினார்.