திருக்கனுார் : வம்புப்பட்டு கிராமத்தில், குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் கழிவு உருக்கு தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் புகையால், பொதுமக்கள் மூச்சி திணறல் மற்றும் சுவாச நோயால் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருக்கனுார் அடுத்த வம்புப்பட்டு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு மத்தியில், தனியார் பிளாஸ்டிக் கழிவு உருக்கு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.இந்த தொழிற்சாலையில் இருந்து, இரவு நேரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்பட்டு, வெளியேற்றப்படும் கரும் புகையால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பல்வேறு சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
50க்கும் மேற்பட்டோர் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும், தொழிற்சாலையை சுற்றிலும், குவிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால், பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சி அதிகரித்து, அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.எனவே, வம்புப்பட்டு குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள் உருக்கு தொழிற்சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்து,வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.