குன்னுார்:குன்னுார் ஹன்கூன்தொரை ஆற்றில் 'கிளீன் குன்னுார்' தன்னார்வ அமைப்பு சார்பில், துார் வாரும் பணி துவங்கியது.நீலகிரி மலை பகுதிகளில் உற்பத்தியாகும் நீர் குன்னுார், பஸ் ஸ்டாண்டில் சங்கமித்து, பவானி ஆற்றில் கலக்கிறது. இந்த சிற்றாறுகளில், குப்பைகள், துணி மூட்டைகள், இறைச்சி கழிவுகள் கொட்டுவது, கழிவுநீர் கலப்பது ஆகியவற்றால் நீர் மாசுபட்டுள்ளது.இந்நிலையில், கடந்த ஜூன் மாதம், மாவட்ட நிர்வாகம், நகராட்சி ஒத்துழைப்புடன் 'கிளீன் குன்னுார்' தன்னார்வ அமைப்பு சார்பில், முதற்கட்டமாக துார்வாரும் பணி நடந்தது.தொடர்ந்து 2வது கட்டமாக நேற்று டி.டி.கே., சாலை மற்றும் ரயில் பாதை ஓரத்தில் உள்ள ஹன்கூன் தொரை எனப்படும் ஆற்றில், 'காந்திபேட் வெல்பேர் சொசைட்டி' மற்றும் தனியார் தன்னார்வலர்களின் நிதி உதவியுடன், 'கிளீன் குன்னுார்' அமைப்பு மூலமாக துார் வாரும் பணி துவங்கியது.இதுகுறித்து அமைப்பின் நிர்வாக அறங்காவலர் சமந்தா கூறுகையில், "கடந்த 1847ம் ஆண்டில், இந்த ஆறு, 100 அடிவரை அகலம் இருந்தது. அப்போது, ஊட்டி சாலை, ரயில்வே ஸ்டேஷன் இல்லை. தற்போது 10 முதல் 20 அடி வரை மட்டுமே உள்ள இந்த சிற்றாறு துார்வாரும் பணி துவங்கியுள்ளது. சிலாட்டர் ஹவுஸ் முதல் பஸ் ஸ்டாண்ட் வரையிலும் ஆற்றில், துார் வாரப்படும் மண் மற்றும் குப்பை கழிவுகள், ஒட்டுப்பட்டறை குப்பை குழியில் கொட்டப்படும்,'' என்றார்.