துார்ந்த வரத்துக்கால்வாய், வறண்ட கண்மாய்: திண்டாடும் திம்மாபுரம் மக்கள் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
துார்ந்த வரத்துக்கால்வாய், வறண்ட கண்மாய்: திண்டாடும் திம்மாபுரம் மக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 அக்
2019
02:29

நரிக்குடி:நரிக்குடி திம்மாபுரத்தில் வாறுகால் வசதிகள் கிடையாது. கழிவு நீர் வீதிகளில் தேங்கி கொசு உற்பத்திக்கு வழிவகுக்கிறது. மழை நேரத்தில் சகதியுமாக இருப்பதால் நடமாட சிரமப்படுகின்றனர்.




தெரு விளக்குகள் சரிவர எரியவில்லை. மாதத்திற்கு ஒரு முறை ரேஷன் பொருட்கள் வழங்குவதால் மக்கள் சிரமத்தில் உள்ளனர். வரத்துக்கால்வாய் துார்ந்து போனதால் மழை நேரத்தில் வரவேண்டிய காட்டாற்று தண்ணீர் வராமல் இப்பகுதியில் மிகப்பெரிய பொதுப்பணித்துறை கண்மாயான திம்மாபுரம் கண்மாய் வறண்டு உள்ளது.இதனால் பல நுாறு ஏக்கர் நெல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகளும் திண்டாடி வருகின்றனர்.

எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.



போதிய வசதிகள் இல்லை



தெரு விளக்கு சரிவர எரிவதில்லை. வாறுகால் வசதி இல்லாததால் கழிவு நீர் வீதியில் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. கொசு மருந்து அடிக்கவில்லை. குப்பை அள்ள யாரும் வருவதில்லை. வீட்டை சுற்றி சீமைக்கருவேல மரங்கள் இருப்பதால் கழிவு நீருக்கு உற்பத்தியாகும் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சரோஜா, குடும்பத்தலைவி.



பேவர் பிளாக் ரோட்டில் சகதி



சில தெருக்களில் பேவர் பிளாக் பதிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய வீதிகளில் பேவர் பிளாக் கிடையாது. போடப்பட்ட பேவர் பிளாக் மேடாக போட்டதால் மழை நேரத்தில் மழை
நீர் தேங்கி, சகதியுமாக கிடக்கிறது. கண்மாய்க்கு வரும் வரத்துக்கால்வாய் துார்ந்து போனதால் சமீபத்தில் பெய்த காட்டாற்று மழை நீர் கண்மாய்க்கு வராமல் வீணாகியது.


ரேஷன் பொருட்கள் மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. அறிவிப்பு இல்லாமல் பொருட்கள் வழங்குவதால் பலருக்கு பொருட்கள் கிடைப்பதில்லை .



அருணோதயம், ஊர் பெரியவர்.



தேவை உயர்மட்ட பாலம்




இப்பகுதி கண்மாயை நம்பி நுாற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் விவசாயம் செய்து வந்தோம். தற்போது கண்மாய் முழுக்க சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் கண்மாய் இருக்கும் இடமே தெரியாமல் போனது. என்ன நடந்தாலும் எதுவும் தெரியாது. வரத்துக்கால்வாய் துார்வார வேண்டும். கண்மாய் குறுக்கே செல்லும் ஆவரங்குளம் ரோட்டிற்காக போடப்பட்ட பாலத்திற்குள் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மழை நேரத்தில் மழை நீர் செல்ல முடியாத நிலையால் வீணாகிறது. இவற்றை அப்புறப்படுத்தி உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்.\



விஜய், தனியார் ஊழியர்.




திறந்தவெளியால் கிருமிகள்



பெண்கள் குளியல் தொட்டி சேதமடைந்து கிடக்கிறது. சுகாதார வளாகம் பயன்படுத்தாமல் திறந்த வெளியை பயன்படுத்தி வருவதால் தொற்று கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளது. வாறுகால் வசதி இல்லாததால் கால்நடை கழிவுகளுடன் மழை நீர் தேங்கி வெளியேற முடியாமல் குடியிருப்புகளுக்குள் தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் .



அபிமன்யூ., தனியார் ஊழியர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X