புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் பகுதியில், சம்பா சாகுபடிக்கு நேரடி நெல்விதைப்பு செய்த நெற்பயிர்கள் காய்ந்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லூர், அத்தியாநல்லூர், புதுச்சத்திரம், சிலம்பிமங்களம், சிண்ணாண்டிக்குழி, கொத்தட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட மாவானாரி நிலங்களில் சம்பா சாகுபடி செய்வது வழக்கம்.மேலும், பூவாலை, வயலாமூர், அலமேல்மங்காபுரம், சேந்திரக்கிள்ளை, வேளங்கிப்பட்டு, வல்லம், தச்சக்காடு, அருண்மொழிதேவன் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,500 ஏக்கருக்கும் மேற்பட்ட நஞ்சை நிலங்களிலும், சம்பா சாகுபடிக்கு, நேரடி நெல் விதைப்பு செய்வது வழக்கம்.இந்நிலையில், இந்தாண்டு மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதையொட்டி, இப்பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய ஆர்வம் காட்டினர். கடந்த மாதம் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களில் நேரடி நெல் விதைப்பு செய்தனர். அவ்வப்போது பெய்த மழையால் நெற்பயிர்கள் நன்கு முளைத்தது.இந்நிலையில் கடந்த சில வாரமாக மழை பெய்யவில்லை. இதனால் நெற்பயிர்கள் காய்ந்து வருகிறது. நஞ்சை நிலத்தில் விதைப்பு செய்த நெற்பயிர்களுக்கு, மானம்பார்த்தான் வாய்க்காலில் வரும் தண்ணீரை, முன்பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், தண்ணீர் தேக்கி பாசனம் செய்கின்றனர்.இதனால் கடைமடை விவசாயிகளுக்கு வாய்க்காலில் வரும் தண்ணீரை தேக்கி வைத்து, பாசனம் செய்ய முடியாத நிலை உள்ளது. புஞ்சை நிலத்தில் விதைப்பு செய்தவர்களுக்கு மழை பெய்தால் மட்டுமே நெற்பயிர்களை காப்பாற்ற முடியும் என்ற நிலை உள்ளது. மழை பெய்யாத காரணத்தால் நஞ்சை, புஞ்சை நிலங்களில் முளைத்துள்ள நெற்பயிர்கள் கருகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.நேரடி நெல் விதைப்பு செய்வதற்கு அதிக தொகையை, இப்பகுதி விவசாயிகள் செலவு செய்துள்ளனர். இன்னும் சில நாட்கள் மழை பெய்யாமல் இருந்தால், சம்பா சாகுபடி நெல் விதைப்பு செய்த நிலங்களில் உள்ள, அனைத்து நெற்பயிர்களும் முற்றிலும் காய்ந்து விவசாயிகள் நஷ்டமையும் நிலை ஏற்படும் என, இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.