மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் எவ்வித வாய்க்கால் பாசனம் இல்லை. அதனால் விவசாயிகள் கிணற்று தண்ணீரையும், மழையையும் நம்பி விவசாயம் செய்து வருகின்றனர்.பவானி ஆற்றின் ஓரத்தில் உள்ள விவசாயிகள், ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்கின்றனர். மேட்டுப்பாளையம் தாலுகா பொதுவாக வானம் பார்த்த பூமியாக உள்ளது.இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மேட்டுப்பாளையம் பகுதியில் பகல் முழுவதும் வெய்யில் அடிக்கிறது. இரவு ஆனதும் இடியுடன் மழை பெய்து வருகிறது. கடந்த, 10ம் தேதி, 27 மி.மீட்டர் மழையும்; 12ல், 11 மி.மீ., 13ல் 27 மி.மீ., 14ம் தேதி, 25 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.தொடர்ந்து நான்கு நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஓடை, பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், கிணறுகளிலும் நீர் ஊற்று வரத்துவங்கும். தொடர் மழை விவசாயத்துக்கு உதவும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.