மதுரை:தமிழகம் முழுவதும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பலருக்கு அரசு வாகனம் ஒதுக்கப்படாததால் டூவீலர்களில் சென்று விசாரிப்பதாக புலம்புகின்றனர்.
போலீஸ் துறையில் டி.ஜி.பி., முதல் காவலர் வரை 24 வகை பதவிகளில் போலீசார் பணியாற்றுகின்றனர். இதில் 2,846 பேர் இன்ஸ்பெக்டர்களாக உள்ளனர். சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, நுண்ணறிவு, சிறப்பு புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர்களுக்கு உடனடியாக வாகனங்கள் ஒதுக்கப்படுகின்றன.
அதேசமயம் சில பிரிவு இன்ஸ்பெக்டர்களுக்கு வாகன பற்றாக்குறையை காரணம்காட்டி ஒதுக்கப்படுவதில்லை. அல்லது 'டப்பா' வண்டிகள் ஒதுக்கப்படுகின்றன.
இதனால் விசாரணைக்காக டூவீலர்களில் சென்று வரவேண்டியுள்ளது என இன்ஸ்பெக்டர்கள் புலம்புகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: சிறப்பு பிரிவுகளுக்கு அதிக வேலை இருக்காது எனக்கூறி வாகனம் ஒதுக்க தயங்குகின்றனர். ஆனால் நீதிமன்ற விசாரணை, வி.ஐ.பி.,க்கள் வருகை, திருவிழா பாதுகாப்பு போன்றவற்றிக்கு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர்களுடன் இணைந்து நாங்களும் பணியாற்றுகிறோம் என்பதை உயர் அதிகாரிகள் கவனத்தில் கொள்வதில்லை. கேட்டால் வாகன பற்றாக்குறை என்கின்றனர். ஒரு வாகனம் அதிகபட்சம் 2.50 லட்சம் கி.மீ., அல்லது 10 ஆண்டுகள் ஓடிவிட்டால் அதை 'கண்டம்' செய்துவிட வேண்டும் என்பது அரசு விதி. ஆனால் பற்றாக்குறையை காரணம்காட்டி 3 லட்சம் கி.மீ., தாண்டியும் ஓடிக்கொண்டிருக்கிறது. இது விபத்துக்கு வழிவகுக்கிறது, என்றனர்.
அதிகாரி ஒருவர்
கூறுகையில், ''புது
வாகனங்கள் வாங்க அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது. விரைவில் அதற்கான கமிட்டி கூடி முடிவெடுக்கும்,'' என்றார்.