புதுச்சேரி:'ஸ்டாலினின் வருகை காங்., வேட்பாளர் ஜான்குமாரின் வெற்றியை உறுதி செய்வதுடன், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கும் அடித்தளமாக இருக்கும்' என, முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் நேற்று அளித்த பேட்டி:புதுச்சேரி மதசார்பற்ற கட்சிகளின் கூட்டணிக்கும், தி.முக., தலைவர் ஸ்டாலினுக்கும் ஒரு ராசி உண்டு. கடந்த 2016ம் ஆண்டில் நெல்லித்தோப்பு தொகுதி இடைத் தேர்தலில் நான் போட்டியிட்டேன். அப்போது, புதுச்சேரிக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வர வேண்டும் என, காங்., - தி.மு.க., சார்பில் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.எங்கள் கோரிக்கையை ஏற்று, நெல்லித்தோப்பு தொகுதியில் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளராக நான் வெற்றி பெற்றேன். அதாவது, 18 ஆயிரத்து 709 ஓட்டுகள் பெற்று அமோக வெற்றி பெற்றேன்.சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் காங்., வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிட்டார். தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளராக வெங்கடேசன் போட்டியிட்டார். அப்போதும், தி.முக., தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.அதன் பலனாக, வைத்திலிங்கம் 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதுபோல, ரங்கசாமி கைவசம் தொடர்ந்து இருந்த தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் வெங்கடேசன் அமோக வெற்றி பெற்றார்.தற்போது, காமராஜ் நகர் தொகுதி இடைத் தேர்தலில் காங்., வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கு வருமாறு கேட்டவுடன், வருவதாக ஏற்றுக் கொண்டார். புதுச்சேரிக்கு இன்று வருகின்ற ஸ்டாலினுக்கு காங்., - தி.மு.க., சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் வருகை எங்கள் வேட்பாளர் ஜான்குமாரின் வெற்றியை உறுதி செய்வதுடன், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு அடித்தளமாக இருக்கும்.இவ்வாறு, நாராயணசாமி கூறினார்.