புதுச்சேரி:இடைத்தேர்தல் நடக்கும் காமராஜ் நகர் தொகுதியில், 48 மணி நேரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:காமராஜ் நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் வரும் 19ம் தேதி மாலை 5:00 மணியுடன் முடிவடைகிறது. எனவே, தொகுதியில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்கவும், தேர்தலை அமைதியாக நடத்திடவும், காமராஜ் நகர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில், ஓட்டுப்பதிவு முடியும் வரையில், 144 (2) பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி, காமராஜ் நகர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 19ம் தேதி மாலை 5:00 மணி முதல், ஓட்டுப்பதிவு முடியும் 21ம் தேதி மாலை வரையில், தடை உத்தரவு அமலில் இருக்கும். எனவே, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடங்களில், தெருக்களில் கூடுவது, எந்த ஒரு நபரும் பேனர்கள், விளம்பர தட்டிகள், பதாகைகள் வைப்பது, ஏந்தி செல்வது, கோஷங்கள் எழுப்புவதுபொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும். எனவே, ஓட்டுப்பதிவை பாதிக்கக்கூடிய எந்த செயலையும் செய்வதற்கும் முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.