பொள்ளாச்சி: தேசிய அளவிலான, 17வது கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவங்கியது.கால்நடைகள் பெரும்பாலும் கோமாரி நோய் தாக்குதலுக்கு உள்ளாகி, விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பெரும் இழப்பை சந்திக்கின்றனர்.மத்திய, மாநில அரசுகள் கால்நடை மருந்தகங்கள், மருத்துவமனைகள் மூலம் கோமாரி நோயை முற்றிலும் ஒழிக்க, கால்நடைகளுக்கு ஆண்டுக்கு இருமுறை தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான, 17வது தடுப்பூசி முகாம் பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள, 31 மையங்களில் நேற்று முன்தினம் துவங்கியது.பொள்ளாச்சி கோட்ட கால்நடை துறை துணை இயக்குனர் ஓம்முருகன், மாக்கினாம்பட்டி கால்நடை மருந்தகத்தில் நடந்த தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார். கால்நடை மருத்துவர், மருத்துவ பரிசோதகர் மற்றும் ஊழியர்கள் உதவியுடன், 150 - 200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டன.முகாம் முதல்நாளில், 3,000 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.நேற்று முதல், நவ., 14ம் தேதி வரை நடைபெறும் முகாமில், 94 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.