'மோ சர்க்கார்' திட்டத்தால் நாடே சீராகும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2019
22:00

'மோ சர்க்கார்' திட்டத்தால் நாடே சீராகும்!


கே.சூர்யா, பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'மக்கள் தான் எனக்கு எஜமானர்கள்; நான், அவர்களின் சேவகன்' என்ற வாசகத்தை, வெறும் வாயளவில் உச்சரிக்காமல், அதை செயல்வடிவில் அமல்படுத்தி, ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், இன்று நாடு முழுக்க, 'ஹீரோ'வாகி விட்டார்.'மோ சர்க்கார்' என்ற வார்த்தை, 'உங்கள் அரசு' என, குறிப்பிடும். அக்., 2 காந்தி ஜெயந்தி முதல், அற்புதமான இந்த திட்டத்தை, ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் செயல்படுத்தி உள்ளார்.இந்த திட்டப்படி, அரசு நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின் முழு விபரங்களும், அங்குள்ள, 'மோ சர்க்கார்' மென்பொருளில் பதியப்படும். பதிவு செய்யப்பட்ட, சில நாட்களில், பதிவு செய்யப்பட்டோரில், ஒரு சிலரை,

'ரேண்டமாக' தேர்வு செய்யப்படுவர்.அவர்களிடம், துறை தலைவர், உயர் அலுவலர்கள், அமைச்சர்கள், ஏன் முதல்வர் நவீன் பட்நாயக் கூட, நேரடியாக தொடர்பு கொள்வார். அலுவலக பிரச்னை எந்த நிலையில் உள்ளது என்பதை, அரசு தரப்பில் கேட்டறிவர். அரசின் சேவை, செயல்பாடுகள் குறித்தும், கருத்துக்களையும் கேட்டு பெறுவர்.இதன் வாயிலாக, அரசு அலுவலகத்தின் நிர்வாக செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை, அரசால் கண்டறிய இயலும்.நிர்வாக தவறுகளை சரி செய்ய, 'மோ சர்க்கார்' திட்டம் பயன்படும். ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் பணியாற்றும் ஊழியரின் செயல்பாட்டை கண்காணிக்க, 'மோ சர்க்கார்' திட்டம் பயன்படுவதால், நிர்வாக நடைமுறையில், தேவையற்ற தாமதம் தவிர்க்கப்படும்.சிறப்பாக பணியாற்றும் அரசு ஊழியரை கண்டறிந்து, அவரை ஊக்குவிக்க முடியும். தவறு செய்யும் அலுவலர்களை கண்டறிந்து தண்டிக்கவும், இந்த மோ சர்க்கார் திட்டம் வழி வகுக்கும்.ஒடிசா மாநில மக்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ள, 'மோ சர்க்கார்' திட்டம் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டால், நாடே சீராகும்!
சவால் விடுவதுபுத்திசாலித்தனம்அல்ல, ஸ்டாலின்!ஏ.தீபன், பம்மல், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழ் வளர்ச்சி' என்ற பெயரில், அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு தயாராகி விட்டார், பிரதமர் மோடி.அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது, ஐ.நா., சபையில், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற, கணியன் பூங்குன்றனாரின் கவிதையை, தமிழிலேயே முழங்கினார். இதை, உலகம் முழுவதும், தமிழின் பெருமையை பேச வைத்தார்; இது, தமிழக மக்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், தி.மு.க., தலைவர் ஸ்டாலினோ, 'தமிழை ஆட்சி மொழியாக ஆக்க முடியுமா' என, பிரதமர் மோடிக்கு சவால் விடுகிறார். 'ஆட்சி மொழியாக, தமிழ் ஆக வேண்டும்' என, பார்லிமென்டில் தனிநபர் மசோதா கொண்டு வந்தால், நாட்டில் உள்ள கட்சிகளின் நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

அதை விடுத்து, ஸ்டாலின் சவால் விடுவது புத்திசாலித்தனம் அல்ல. இது, அரசியல் அரைவேக்காட்டு தனத்தையே காட்டுகிறது. தமிழ் மொழி வளர வேண்டுமானால், முதலில், தமிழை கற்று மேடையில் பேசி, வளர வேண்டும்.சமீபத்தில், சிவகங்கை மாவட்டம், கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பானை ஓடுகளில் உள்ள எழுத்துக்கள், 'கி.-மு., 600 ஆண்டுகள் பழமையானது' என தெரிய வந்துள்ளது; இது, தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் செய்தி.இது குறித்து, ஸ்டாலின் மேடை ஒன்றில் பேசும்போது, 'பானை ஓடுகள் என்பதற்கு பதிலாக, பனை ஓடுகள் என, தவறாக உச்சரித்து, தன் அரைகுறை தமிழ் அறிவை வெளிப்படுத்தி இருக்கிறார்.பொதுவாக, மேடைகளில் பேசும்போது, கையில் துண்டு சீட்டை வைத்து பேசுவது, ஸ்டாலினின் வழக்கம். அதே போல, 'பானை ஓடுகள் என்பதை, பனை ஓடுகள்' என மாற்றி பேசி விட்டார். தமிழ் பேராசிரியர் ஒருவரை துணைக்கு வைத்து, ஸ்டாலின் தமிழ் படித்து பேசுவது நலம்!

'ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானாக வளரும்' என்று சொல்வர். நாட்டில் பெரும்பான்மையினர் பேசும் மொழியை, குறிப்பாக, ஹிந்தியை தமிழர்கள் கற்க, தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.அவ்வாறு செய்தால் மட்டுமே, தமிழ் மொழியின் பெருமை, மற்ற மாநில மக்களுக்கு போய் சேரும். தமிழக அரசும், ஹிந்தி எதிர்ப்பாளர்களும், இதை உணர வேண்டும்!
இனியாவதுசுற்றுலா தலங்களைமேம்படுத்துங்கள்!


அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வெளிநாட்டிலிருந்து, அதிபரோ அல்லது பிரதமரோ வந்தால் தான், சுற்றுலா தலங்கள் சுத்தம் செய்யப்படும் என்ற நிலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது, மாமல்லபுரம்.சமீபத்தில், பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங் சந்திப்பு இங்கு நடந்தது. இந்த சந்திப்பு நடக்கும் என, முன்கூட்டியே தெரிந்த தமிழக அரசு, மாமல்லபுரம் பராமரிப்பை, உலகம் போற்றும் அளவிற்கு மேம்படுத்தியது; இதற்கு, தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்!வெளிநாடுகளில் இருந்து தலைவர்கள் வந்தால் மட்டுமா, சுற்றுலா தலங்களை புதுப்பிக்க வேண்டுமா... 'ஆண்டு முழுவதும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருவர்' என கருதி, கண்ணும் கருத்துமாக, நம் வரலாற்று பெருமையை அழியாமல் காக்க வேண்டும்.மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில், சுற்றுலா தலங்கள், ஆன்மிக, வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் அதிகம் உள்ளன. பெரிய கோவில்கள், சுதந்திர போராட்ட நினைவு இடங்கள், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற கோடை வாசஸ்தலங்கள் உள்ளன.கோடியக்கரை, வேடந்தாங்கல் போன்ற சரணாலயங்கள், தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், பூம்புகார், மதுரை, செஞ்சி போன்ற பண்டைய மன்னர்களின் பெருமையை பறைசாற்றும் இடங்கள் உள்ளன.கல்லணை எனும் கம்பீர நீர்த்தேக்கம், பிச்சாவரம் என்னும் படகு குழாம், ஸ்ரீரங்கம் பிரமாண்டமான பெரிய கோபுரம், திருவாரூர் பிரமிக்கத்தக்க தேர், திருச்சி மலைக்கோவில், பழநி முருகன் கோவில், சிதம்பரம், காஞ்சி, நெல்லை கோவில்கள் உள்ளன. இவற்றால், தொன்மை நிறைந்த தமிழகத்தின் பெருமையை அறிய முடியும்.இவற்றையெல்லாம் முறையாக காக்க வேண்டிய பொறுப்பு, சுற்றுலா துறை, ஹிந்து சமய அறநிலையத் துறை மற்றும் பொதுப்பணித்துறையின் கடமை. ஆனால், மூன்று துறைகளும் போட்டி போட்டு, தத்தம் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை.இனியாவது, 'இதை செய்ய முடியும்' என்ற எண்ணம் அனைத்து துறைகளுக்கு வர வேண்டும்.சுற்றுலா தலங்களை பராமரிப்பதில் தனி கவனம் செலுத்தும் பட்சத்தில், கூடுதலாக சுற்றுலா பயணியர் வருகை தர வாய்ப்புள்ளது. அதன் வாயிலாக, உள்ளூர் வேலைவாய்ப்பும் பொருளாதாரமும் மேம்படும்!
'ஸ்பேர் பார்ட்ஸ்' கிடைக்காத காங்., 'ஓல்டு மாடல்!'எஸ்.காதர்பாட்ஷா, பேகம்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: நாடு சுதந்திரம் அடைந்த பின், பன்மொழி, மதசார்பற்ற ஜனநாயகத்துக்கு வித்திட்டார், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு. அவர் இறந்து, இந்திரா பிரதமரான பின், அதிகாரம் அவரது ஒரே கையில் குவிந்தது.அவருக்கு துதிபாடிகள் நெருக்கமாக இருந்து, அதிகாரத்தை அனுபவித்தனர். டில்லியில் இருந்து, ஒவ்வொரு மாநில காங்கிரசுக்கும் தலைவர்கள் பொறுப்பு அதிகாரியாக திணிக்கப்பட்டனர். உயர் மட்ட காரியக் கமிட்டியில், துதிபாடிகளை இந்திராவிடம் துதித்ேதாரால் நிரப்பப்பட்டனர்.

முன்னாள் பிரதமர் இந்திரா படுகொலையை தொடர்ந்து, ௩,௦௦௦ சீக்கியர் கொல்லப்பட்ட போது, ராஜிவ் உரக்க கண்டிக்கவில்லை.கடந்த, 2014 லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ், 'ஹிந்துக்களுக்கு தாங்கள் எதிரி அல்ல' என, நிரூபிக்க போராடியது. கட்சி தலைமையை விட்டுக் கொடுக்க, சோனியா, ராகுல், பிரியங்கா முன் வரவில்லை. நேரு குடும்பத்தை மட்டுமே நம்பி இருப்பதால், காங்கிரஸ் மீண்டும் புத்துயிர் பெற்று எழ முடியவில்லை.மஹாத்மா காந்தி தலைமையில் போராடி, ஆங்கிலேயரிடமிருந்து நாடு சுதந்திரம் பெற காரணமாக இருந்த, காங்கிரஸ், இன்று ஓட்டை சல்லடை ஆகி விட்டது; அதில், கசடுகள் மட்டும் தங்கி விட்டன.மதசார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கான வாய்ப்பு, இன்னும் காங்கிரசில் காலியாகவே உள்ளது. தேசிய கண்ணோட்டம் உள்ள திட்டவட்டமான, சமூக, பொருளாதார திட்டத்தை முன்னெடுக்கத்தக்க செல்வாக்குள்ள, இளம் தலைவர் தேவை.சுய விளம்பரம், புகழ் இரண்டுமே, தொத்து வியாதிகள். ஜனநாயக சோஷலிசம் என்பதை, இன்று காங்கிரசார் மறந்து விட்டனர். முழு நம்பிக்கையுடன், தனி நபர் துதிபாடாமல், இன்று இளைஞர்கள், விவசாயிகள், மகளிர் எதிர்பார்ப்புகளுக்கு, ஏற்ற திட்டங்களுடன், மீண்டும் களம் புகுந்தால், காங்கிரசை மாநில கட்சிகளும் ஆதரிக்கும்!தபால் அட்டைதயாரிப்பதைநிறுத்தி விடாதீர்!
ச.கண்ணன், வத்தலக்குண்டு, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: நாட்டில், இன்றியமையாதது, கடித போக்குவரத்து. சில அத்தியாவசிய தேவைகளுக்கு, தபால் அட்டை, 'இன்லேண்ட்' லெட்டர் ஆகிய இரண்டுமே, கட்டாயம் தேவைப்படும்.குறிப்பாக, தினசரி நாளிதழ்கள், வாராந்திர நாளிதழ்கள், புத்தகங்கள், மாதாந்திர புத்தகங்களுக்கு விமர்சனம், போட்டிகளுக்கான பதில்கள் அனுப்புவது, வாழ்த்துக்கள் தெரிவிப்பது என, அனைத்தும், இவற்றின் வாயிலாக தான் அனுப்பப்பட்டு வருகின்றன.ஆனால், தற்போது, இவை இரண்டுமே தபால் நிலையங்களில், சரிவர பெற முடிவதில்லை.இது குறித்து அஞ்சலக மேலாளரிடம் கேட்டபோது, 'இவை இரண்டையும் தயார் செய்யும் செலவு அதிகம்; விற்பதோ, குறைவான விலை.அனைத்து சேவைகளும், 'இன்டர்நெட், இ - மெயில், மொபைல் போன்' வாயிலாக நடைபெறுவதால், இதை யாரும் அதிக அளவில் பயன்படுத்துவதில்லை. இதனால், இவற்றை தயாரிப்பதை நிறுத்தி விட்டோம்' என்கிறார்.நாட்டில், எவ்வளவு புதுமைகள் வந்தாலும், மாறாதது என, சில வகைகள் இருந்து தான் வருகின்றன. அவை, தபால் அட்டையும், இன் லேண்ட் லெட்டரும் தான். இவை, பொது நல சேவையாக கருதப்படுகிறது.கடித போக்குவரத்து என்பது, பல ஆண்டுகளாக தொன்று தொட்டு வரும் கலாசாரம். அதை முற்றிலுமாக அழிக்க நினைக்கக் கூடாது.நாட்டில், திட்டங்களுக்கு எவ்வளவோ நிதி வழங்கப்பட்டு, அதை சரிவர பயன்படுத்த முடியாமல் உள்ளது. இன்று, 'இன்டர்நெட், இ - மெயில், பேஸ் புக், வாட்ஸ் ஆப்' குறுஞ்செய்தி அதிகளவில் அனைவரையும் ஆட்கொண்டு விட்டதால், தபால் அட்டை, இன்லேண்ட் லெட்டர் அதிகளவில் பயன்படுத்தப்படுவதில்லை என்பது உண்மை தான்.இருப்பினும், இன்றளவும் மக்கள் அதிகளவில் விரும்பும், தபால் அட்டை, இன்லேண்ட் லெட்டர் தயாரிப்பை அதிகபடுத்தி, அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். எப்போதும் போல, தபால் நிலையங்களில், தங்கு தடையின்றி தபால் அட்டை, இன்லேண்ட் லெட்டர் கிடைக்க, மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

செலவு கூடுதலாகும் என்பதால், சிறிய அளவில் விலை ஏற்றம் செய்து கூட வெளியிடலாம். அதை அனைத்து தரப்பினரும் நிச்சயம் ஏற்றுக் கொள்வர். பாரம்பரியமிக்க கடித போக்குவரத்தை, மத்திய அரசு, தடை செய்யாமல், தொடர்ந்து கிடைத்திட வழி காணுமா?
ஓய்வூதியத்தைஎதிர்ப்போர்திருந்துங்கள்!என்.கல்யாணசுந்தரம், கூத்தப்பாக்கம், கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: பிரான்ஸ் போன்ற நாடுகளில், அரசு ஊழியர் ஓய்வு பெற்று விட்டாலும், அவர் கடைசியாக வாங்கிய ஊதியத்தை அடிப்படையாக வைத்து, அவர் வாழும் வரை, அரசு வாழ வழி வகுக்கிறது. அரசுக்காக, உழைத்தோருக்கு, ஓய்வூதியம் வழங்குவதும், மக்கள் நலன் தான்; மகேசன் தொண்டு தான்!அரசு ஊழியர்கள் எல்லாம், ஓய்வு பெறும் போது, ஏதோ.. செல்வ செழிப்போடு இருப்பர் என்பது, ஒரு மாயை. பெரும்பாலான அரசு ஊழியர்கள், ஓய்வு பெறும் போது, கடனாளியாக தான், ஓய்வு பெறுகின்றனர்.பிள்ளைகளின் படிப்புக்காகவும், பெண்களின் திருமணத்திற்காகவும், ஓய்வு பெறும் போது, கிடைக்கவுள்ள பலன்களை காரணம் காட்டி, கடனாக பெறுகின்றனர். ஓய்வு பெறும் போது, யாரும் தொழிலதிபர்களாக ஓய்வு பெறுவதில்லை; கடன்காரர்களாக ஓய்வு பெறுகின்றனர்.பெற்றோரை தவிக்க விட்டு, தன் சந்தோஷத்தை மட்டுமே, சொத்தாக நினைத்து வாழும் பிள்ளைகளை போல, அரசால் இருக்க முடியுமா... முதியோர் வாழ்வதற்கு அரசு வகை செய்ய வேண்டாமா...புயல், பூகம்பம், மழை, வெள்ளம், கலவரம் என, வரும்போதெல்லாம், எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், தன் உயிரை பணயம் வைத்து, தன் குடும்பத்தை மறந்து, அரசுக்காக உழைக்கும், அரசு ஊழியரின் பணிக்காக மதிப்பு உண்டா?ஓய்வூதியம் குறித்து, 'வேண்டும்' என, பலரும், 'வேண்டாம்' என, சிலரும் எழுதுகின்றனர். 'வேண்டாம்' என, எழுதுவோரை நினைத்தால், வேதனையாக உள்ளது.ஒரு சில துறைகளில் வேண்டுமானால், ஒரு சில அதிகாரிகள், செல்வந்தர்களாகவோ, சீமான்களாகவோ, சீமாட்டிகளாகவோ ஓய்வு பெறலாம்; ஆனால், அது, பெரும்பான்மையினரை காட்டுவதில்லை.அரசின் செலவுகளில், எத்தனையோ ஆடம்பரங்கள், அனாவசியங்கள் உள்ளன. அவற்றையெல்லாம், கணக்கெடுத்து தவிர்க்க சொல்லுங்கள்.ஓய்வூதியம் என்பது, அவசியமான, ஆதாரமான செலவுகள். வேண்டுமெனில் அவற்றை எப்படி மேம்படுத்த முடியும் என சிந்தித்து, எதிர்ப்போர் கருத்து கூறி திருந்துங்கள்! 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raajaraajan - Cheenai,இந்தியா
18-அக்-201907:43:31 IST Report Abuse
Raajaraajan தயவுசெய்து வங்கிகளில் டெபாசிட் செய்யும் தொகையை உங்களுக்கு நெருக்கமான உறவினர்களுக்கு குறைந்ந்த வட்டியில் கடனாக கொடுத்து உதவுங்கள் காலம் போன கடைசியில் உங்கள் பணம் உங்களை சேர்ந்தவர்களுக்கு உதவிய மனதிருப்பிகியாவது இருக்கும் வரும்காலங்களில் வங்கிகளை ஒனென்றுடன் ஒன்று இணைத்து மக்களின் பணம் வாராக்கடன் கணக்கில் போய்விடும்
Rate this:
Cancel
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
18-அக்-201903:39:56 IST Report Abuse
Subramanian Sundararaman ஓய்வு ஊதியத்தை அரசு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று ஒரு வட்டத்திற்குள் வரையறையை ஏன் சுறுக்கவேண்டும் . தனியார் துறை ஊழியர்கள் கூட ஓய்வு பெற்றபின் அதே சுமையைத்தானே சுமக்கிறார்கள் . பணி காலத்திலும் வேலை நிச்சயமில்லை என்ற அச்சத்துடனே வாழ்கிறார்கள் . வைப்பு நிதி , பணிக்கொடை போன்ற ஓய்வு கால நிதி கூட சரிவர கிடைப்பதில்லை . அரசு கொண்டுவந்துள்ள புதிய பென்ஷன் தொகையில் பாதி அளவு கூட தனியார் துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு அந்த terminal benefit தொகையை பாங்குகளில் டெபாசிட் செய்தால் கிடைப்பதில்லை என்பது தெரியுமா ? வருடா வருடம் வட்டி வீதம் குறைக்கப்படும் போது நிலைமை இன்னும் மோசம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X