சிதம்பரம்:அண்ணாமலை பல்கலைக்கழக மாணவிகள் விடுதியில் நுழைந்து நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலுார் மாவட்டம் கீழவல்லம் சந்தன கொட்டகையை சேர்ந்த கஜேந்திரன் மகள் பவித்ரா, 23. இவர் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலத்தில் எம்.எஸ்சி., வேளாண்மை படித்து வருகிறார். இவர் பல்கலைக்கழக தாமரை இல்லம் மாணவிகள் விடுதியில் தங்கியுள்ளார். அதே வகுப்பைச் சேர்ந்த தோழி கீர்த்தனா மற்றொரு அறையில் தங்கியுள்ளனர். கடந்த 10ம் தேதி காலை, வழக்கம் போல் இருவரும் கல்லுாரிக்கு சென்றனர். மாலை ரூமிற்கு வந்து பார்த்த போது, பவித்ரா பையில் வைத்திருந்த ஒன்னரை பவுன் தங்க செயினும், கீர்த்தனா பையில் வைத்திருந்த ரூ.11 ஆயிரமும் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அண்ணாமலை நகர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என, நேற்று முன்தினம், விடுதி மாணவிகள் திடீர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பேராசிரியர்கள், அண்ணாமலை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் செய்தனர். போலீசார் நேற்று, வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.