ஊட்டி:ஊட்டி அருகே பர்ன்ஹில் வனப்பகுதியில் சோலை மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடந்து வருகிறது.ஊட்டியில் மத்திய அரசின் திட்டமான, ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ், நீராதாரத்தை பெருக்க மரம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நீலகிரியில் சோலை வனப்பகுதிகளை கண்டறிந்து, அதில் உள்ள களைச்செடிகளை அகற்றி, சோலை மரங்களை நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த 'ஜல்சக்தி அபியான்' திட்டத்தில் கீழ், 1,000 மரக்கன்றுகள் நடவு செய்ய வனத்துறை திட்டமிட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக சமீபத்தில் முத்தநாடு காப்பு காட்டில், 200 மரக்கன்று நடவு செய்யப்பட்டன. தற்போது, பர்ன்ஹில் வனப்பகுதியில், 600 சோலை மரக்கன்று நடவு பணி நடந்து வருகிறது.வனத்துறையினர் கூறுகையில், 'மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் சோலை வனப்பகுதிகளை கண்டறிந்து, சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளை பராமரிப்பதில், அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மரம் வளர்ப்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்,' என்றனர்.